கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற தமிழக வாலிபர் உள்பட 3 பேர் கைது

பெங்களூருவில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.6½ லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற தமிழக வாலிபர் உள்பட 3 பேர் கைது
Published on

பெங்களூரு:

பெங்களூரு காட்டன்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்கு ஒரு கும்பல் முயற்சி செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பலை பிடிக்க மேற்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் (சட்டம்-ஒழுங்கு) சதீஸ்குமார் உத்தரவின் பேரில் துணை போலீஸ் கமிஷனர் லட்சுமண் நிம்பரகி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், காட்டன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜிக்கு, சிட்டி ரெயில் நிலையம் முன்பாக உள்ள நடைபாதை பகுதியில் வைத்து 3 பேர் கள்ளநோட்டுகளை மாற்ற முயற்சிப்பதாக தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றிய 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் ரூ.500 முக மதிப்புடைய கள்ளநோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் தமிழ்நாடு கரூரை சேர்ந்த சரவணன், கேரளாவை சேர்ந்த நிதின், தேவன் என்று தெரிந்தது. இவர்கள் 3 பேரும், தமிழ்நாடு, பீகாரில் இருந்து பெங்களூருவுக்கு ரூ.500 முக மதிப்புடைய கள்ளநோட்டுகளை கடத்தி வந்து, காட்டன்பேட்டை, அதை சுற்றியுள்ள பகுதிகளில் புழக்கத்தில் விட முயன்றது தெரியவந்துள்ளது. கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்காக இன்ஸ்டாகிராமில் போலி கணக்கும் தொடங்கி இருந்தனர்.

அதன்மூலமாக கள்ளநோட்டுகளை கைமாற்றுவது குறித்து தகவல்களை பரிமாறி வந்துள்ளனர். பீகாரில் உள்ள ஒரு நபரிடம் இருந்து கள்ளநோட்டுகளை வாங்கி, அவற்றை தமிழ்நாட்டுக்கு முதலில் கொண்டு வந்ததும், அதனை புழக்கத்தில் விடுவதற்காக பெங்களூருவுக்கு கடத்தி வந்ததும் தெரிந்தது. கைதான 3 பேரிடம் இருந்து ரூ.500 முக மதிப்புடைய 1,307 கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.6 லட்சத்து 53 ஆயிரத்து 500 ஆகும். அவர்கள் 3 பேர் மீதும் காட்டன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com