பேராசிரியர் ஓட்டி சென்ற கார் மோதி மாணவிகள் உள்பட 3 பேர் படுகாயம்

தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் பேராசிரியர் ஓட்டி சென்ற கார் மோதி 2 மாணவிகள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
பேராசிரியர் ஓட்டி சென்ற கார் மோதி மாணவிகள் உள்பட 3 பேர் படுகாயம்
Published on

பெங்களூரு:-

மகாராணி கல்லூரி

பெங்களூரு சுதந்திர பூங்கா அருகே மகாராணி கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள், பேராசிரியைகள் வழக்கம் போல கல்லூரிக்கு வந்தனர். அப்போது பேராசிரியர் நாகராஜ் என்பவர் தனது காரில் கல்லூரிக்கு வந்தார். அவர் தனது காரை வளாகத்தில் உள்ள வளைவில் திருப்ப முயன்றார். அந்த சமயத்தில் நாகராஜின் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி அங்கு நின்ற மற்றொரு பேராசிரியரின் கார் மீது மோதியது.

அத்துடன் அங்கு நடந்து சென்ற 2 மாணவிகள், ஒரு பேராசிரியை மீதும் மோதியது. அதன்பிறகு அருகில் உள்ள மரத்தில் மோதி கார் நின்றது. இந்த விபத்தில் பேராசிரியர் நாகராஜின் கார், மற்றொரு பேராசிரியரின் கார் ஆகியவை சேதம் அடைந்தன.

3 பேர் படுகாயம்

மேலும், கார் மோதியதில் 2 மாணவிகள், பேராசிரியை பலத்த காயம் அடைந்தனர். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மாரத்தா தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் உப்பார்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

விசாரணையில் படுகாயம் அடைந்தது அந்த கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படிக்கும் அஸ்வினி, பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படிக்கும் நந்துபிரியா மற்றும் இசை பேராசிரியை ஜோதி என்பது தெரியவந்தது. இதில் அஸ்வினியின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் மற்றொரு ஆஸ்பத்தரிக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொப்பல் மாவட்டம் கங்காவதியை சேர்ந்த அஸ்வினி, பெங்களூரு ஆர்.டி.நகரில் தங்கி மகாராணி கல்லூரியில் படித்து வருவது தெரியவந்தது.

சிகிச்சை செலவுகளை...

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், பேராசிரியர் நாகராஜ், கல்லூரி வளாகத்தில் வேகமாக காரை ஓட்டி வந்ததும், காரை வளைவில் திரும்பும்போது பிரேக்கை மிதிப்பதற்கு பதிலாக ஆக்ஸ்லேட்டரை அழுத்தியதும், அதனால் கார் அவரது கட்டுப்பாட்டை இழந்து விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது. இந்த விபத்து குறித்து உப்பார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு சய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் நேற்று காலை கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மகாராணி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கோமதி தேவி சம்பவம் நடந்த இடத்துக்கு வந்து பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த இந்த திடீர் விபத்தில் எங்கள் கல்லூரியை சேர்ந்த 2 மாணவிகள், ஒரு பேராசிரியை ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கான செலவுகளை பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்றுகொள்ளும் என்றார்.

மாணவியின் தந்தை பேட்டி

இதுகுறித்து படுகாயம் அடைந்த அஸ்வினியின் தந்தை அமரேஷ் கூறுகையில், எனது மகளின் தோழி காலை 10 மணி அளவில் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு, அஸ்வினி கார் விபத்தில் சிக்கியதாகவும், தற்போது சிகிச்சையில் இருப்பதாகவும் கூறினார். உடனே நான் இங்கு விரைந்து வந்தேன். எனது மகளின் உயிருக்கு ஆபத்து இல்லை என கூறுகிறார்கள். நான் எனது மகளை பார்க்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com