

லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டம் ஹசன்பூர் பகுதிக்குட்பட்ட தௌரியா கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரிகள் சரோஜ் (20), சாவித்திரி (19) மற்றும் சந்தோஷ் (18). சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் இவர்களுக்கு லட்சக்கணக்கான பின் தொடர்பாளர்கள் உள்ளனர். தினமும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளனர்.
இவர்களுக்கு ஷியாம்பூரி கிராமத்தைச் சேர்ந்த விகாஸ் (20) என்ற வாலிபர் கேமராமேனாகப் பணியாற்றி வந்துள்ளார். மேலும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பல வீடியோக்களில் 3 சகோதிகரிகளுக்கும் கணவர் போன்ற கதாபாத்திரங்களிலும் விகாஸ் நடித்துள்ளார்.
இந்த நிலையில், பெற்றோர் தங்களுக்கு திருமணம் செய்து வைத்தால் வெவ்வேறு இடங்களுக்கு சென்று விடுவோம் என்றும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்வது தடைபடும் என்றும் அஞ்சிய சகோதரிகள் 3 பேரும் தங்களது கேமராமேன் விகாஸை திருமணம் செய்து கொண்டனர். கடந்த 17-ம் தேதி அந்த கிராமத்தில் உள்ள சாமுண்டா தேவி கோவிலில் நெருப்பை சாட்சியாக வைத்து திருமணம் செய்தனர்.
கேமராமேனை திருமணம் செய்த வீடியோவை சகோதரிகள் 3 பேரும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது. வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக 6 நிமிட வீடியோ ஒன்றை சகோதரிகள் வெளியிட்டனர். அதில், “நாங்கள் சிறுவயது முதலே ஒன்றாக வளர்ந்தவர்கள், எங்களால் பிரிந்து வாழ முடியாது. பெற்றோர் எங்களுக்கு தனித்தனியே வரன் பார்க்க தொடங்கியதால், சாவதை விட ஒரே நபரை திருமணம் செய்து ஒன்றாக வாழலாம் என முடிவெடுத்தோம். எங்கள் சொந்த விருப்பத்தின் பேரிலேயே இந்தத் திருமணத்தைச் செய்துகொண்டோம். புராண காலத்தில் தசரத மன்னருக்கு மூன்று மனைவிகள் இருந்தபோது, நாங்கள் செய்ததில் என்ன தவறு இருக்கிறது?. தாங்கள் எந்த மதத்தையும் அவமதிக்கவில்லை என்று கூறினர்.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எந்தவொரு புகாரும் வரவில்லை என்றும் வீடியோவின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ரீல்ஸ் வீடியோ எடுத்த கேமராமேனை 3 சகோதரிகள் திருமணம் செய்த ருசிகர சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.