

மும்பை,
மராட்டியத்தின் மும்பை பெருநகரில் பயணிகள் தங்களது அலுவலகம் மற்றும் பிற பணிகளுக்காக புறநகர் ரெயிலை அதிகம் சார்ந்து உள்ளனர். இதனால், ரெயில்களில் கூட்டம் அலைமோதும்.
இந்த நிலையில், மும்பையின் ஜோகேஸ்வரி ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் கடந்த 16ந்தேதி பதிவான காட்சிகள் வெளியிடப்பட்டன.
அதில், ரெயில் ஒன்றில் இருந்து கீழே விழுந்த இளம்பெண் ஒருவரை பணியில் இருந்த ரெயில்வே பாதுகாவலர் அல்டாப் ஷேக் உடனடியாக செயல்பட்டு காப்பாற்றினார்.
அவர் பணியில் புத்திசாலித்தனத்துடனும், எச்சரிக்கையுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயல்பட்டதற்காக உயரதிகாரிகளால் பாராட்டப்பட்டார். இதுபற்றிய வீடியோ ஒன்றை மும்பை காவல் ஆணையாளர் (ரெயில்வே) கைசர் காலித் வெளியிட்டு உள்ளார்.
ஆனால், அல்டாப் காப்பாற்றிய இளம்பெண் தவிர 2 இளம்பெண்கள் ஓடும் ரெயிலில் இருந்து நடைமேடையில் குதித்து உள்ள காட்சிகளும் வீடியோவில் இடம் பெற்று அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளன.
அதற்கான காரணம் என்னவென தெரியாமல் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் குழம்பி போயுள்ளனர். எதற்காக அவர்கள் இருவரும் ஓடும் ரெயிலின் ஒரு பெட்டியில் இருந்து நடைமேடையில் குதித்தனர் என்பது விடை தெரியாத மர்ம நிகழ்வாகவே காணப்படுகிறது.