30 அடி உயர கரப்பான்பூச்சி உருவபொம்மை எரிப்பு; ஆம் ஆத்மி புகார்

அதில், அந்த உருவபொம்மை மத உணர்வுகளை புண்படுத்தி விட்டது என்று தெரிவித்து உள்ளார்.
ai image
ai image
Published on: 

புதுடெல்லி

30 அடி உயர கரப்பான்பூச்சி உருவபொம்மை எரிப்பை தொடர்ந்து டெல்லி போலீசில் ஆம் ஆத்மி புகார் அளித்துள்ளது.

டெல்லி பீதாம்புராவில் இன்று ராம்லீலா விழா நடைபெற்றது. தீமையை நன்மை வெற்றி கொள்ளும் வகையில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில், ராவணன், கும்பகர்ணன் மற்றும் மேகநாத் உள்ளிட்டோரின் உருவபொம்மைகள் வைக்கப்பட்டன.

30 அடி உயரம்

தீமையை, நன்மையானது வெற்றி கொள்ளும் செய்தியை வலியுறுத்தும் வகையில் ஒரு மரபாக, இந்த உருவபொம்மை எரிப்பு நிகழ்ச்சி நடைபெறும். ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொள்வார்கள்.

இந்த சூழலில், ராவணன் உள்ளிட்ட உருவபொம்மைகளுடன் 30 அடி உயர கரப்பான்பூச்சி பொம்மையையும் எரிக்க ஸ்ரீ கேசவ் ராம்லீலா கமிட்டி முடிவு செய்துள்ளது. தூய்மை இந்தியா விழிப்புணர்வை ஏற்படுத்தவே அசுத்தத்தின் அடையாளமான கரப்பான் எரிக்கப்படுவதாக விழா அமைப்பாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

உருவபொம்மை எரிப்பு

இதன்படி, ராவணனின் சேனையில் அசுரர்களில் ஒன்றாக கரப்பான்பூச்சியும் உருவகப்படுத்தப்படும். தூய்மை இந்தியா மற்றும் தூய்மை டெல்லி திட்டத்தின் கீழ் கழிவுப்பொருள் மற்றும் அழுக்கு போன்றவற்றை நீக்குவதற்கான அடையாளமாக அவை எரிக்கப்படும். இந்த அமைப்பு இதற்கு முன்பு, நக்சலைட்டுகள், பயங்கரவாதிகள் உள்ளிட்டோரை பிரதிபலிக்கும் வகையிலான உருவபொம்மைகளை எரித்து உள்ளது.

ஆம் ஆத்மி புகார்

இந்நிலையில், 30 அடி உயர கரப்பான்பூச்சி உருவபொம்மை எரிக்கப்பட்டது. இதற்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. அதன் டெல்லி தலைவர் சவுரப் பரத்வாஜ், டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார்.

துணை நிலை கவர்னர் தரண்ஜித் சிங் சந்துவிடமும், அவர் புகார் அளித்துள்ளார். அதில், அந்த உருவபொம்மை மத உணர்வுகளை புண்படுத்தி விட்டது என்று தெரிவித்து உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com