சபரிமலையில் 30 ஆண்டுகளாக பாதுகாப்பு பணி மேற்கொள்ளும் போலீஸ் அதிகாரி

ஜனாதிபதியின் போலீஸ் பதக்கம், முதல்-மந்திரியின் போலீஸ் பதக்கம், மத்திய உள்துறை மற்றும் கேரள போலீஸ் துறையின் உயரிய விருதுகளையும் பெற்று உள்ளார்.
சபரிமலையில் 30 ஆண்டுகளாக பாதுகாப்பு பணி மேற்கொள்ளும் போலீஸ் அதிகாரி
Published on: 

சபரிமலை,

சபரிமலையில் போலீஸ் அதிகாரி ஒருவர் 30 ஆண்டுகளாக பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகிறார். இவர் ஜனாதிபதியின் போலீஸ் பதக்கம் பெற்றவர்.

பாதுகாப்பு பணி

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசனில் ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து தரிசனம் செய்வார்கள். இதையொட்டி கோவிலில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

அதன்படி கடந்த 30 ஆண்டுகளாக சீசன் காலங்களில் ஒரு போலீஸ் அதிகாரி பாதுகாப்பு பணியில் தன்னை அர்ப்பணித்து சேவை செய்து வருகிறார்.

உதவி கமாண்டர்

அது குறித்த விவரம் வருமாறு:-

கேரள மாநிலம் கண்ணூர் அஞ்சரக்கண்டியை சேர்ந்தவர் ஹரிபிரசாத் (வயது 56). இவர் 1993-ம் ஆண்டு கேரள போலீஸ்துறையில் பணியில் சேர்ந்தார். தற்போது கண்ணூர் மாங்காட்டுபரம்பில் ஆயுதப்படை 4-ம் படை பிரிவில் உதவி கமாண்டராக பணி செய்து வருகிறார்.

30 ஆண்டுகளாக..

இவர் கடந்த 30 ஆண்டுகளாக சபரிமலை மண்டல, மகரவிளக்கு சீசன் காலங்களில் சன்னிதானம், 18-ம் படி, மாளிகப்புரம், மரக்கூட்டம், பம்பை, நிலக்கல் போன்ற இடங்களில் தொடர்ச்சியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பக்தர்களுக்கு சேவை செய்து வருகிறார்.

ஜனாதிபதியின் போலீஸ் பதக்கம்

சீசன் காலங்கள் தவிர மற்ற நாட்களில், அன்றாட பணியுடன் சைபர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகளை மாநிலம் முழுவ தும் நடத்தி வருகிறார். இதுவரை 650 கருத்தரங்குகளை நடத்தியுள்ளார். இதன்மூலம் சைபர் குற்றங்களில் ஈடுபட்டு மனதளவில் பாதிக்கப்பட்ட 428 மாணவ-மாணவிகளை இயல்பு நிலைக்கு மீட்டுள்ளார். இவர் தனது சேவையின் மூலம் ஜனாதிபதியின் போலீஸ் பதக்கம், முதல்-மந்திரியின் போலீஸ் பதக்கம், மத்திய உள்துறை மற்றும் கேரள போலீஸ் துறையின் உயரிய விருதுகளையும் பெற்று உள்ளார்.

மாநில அளவில் முதல் இடம்

அத்துடன் 75-வது சுதந்திர தினத்தையொட்டி மத்திய உள்துறை சார்பில் நடைபெற்ற சைபர் வினாடி-வினா போட்டியில் தேசிய அளவில் 5-வது இடத்தையும், மாநில அளவில் முதல் இடத்தையும் பிடித்தார்.

X