மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவதற்கு 30-ந்தேதி கடைசி நாள்

மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவதற்கு 30-ந்தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தை தேர்வு செய்வதற்கு வருகிற 30-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.
எனவே இந்த காலக்கெடு முடிவதற்குள் ஊழியர்கள் அந்த திட்டத்தை ேதர்வு செய்யுமாறு மத்திய நிதி அமைச்சகம் அறிவித்து உள்ளது. கடைசி நேர நெருக்கடியை தவிர்ப்பதற்காக 30-ந்தேதிக்கு முன்னதாகவே திட்டத்தை தேர்வு செய்யவும், அவர்களின் கோரிக்கை சரியான நேரத்தில் செயலாக்குவதை உறுதி செய்யவும் கேட்டுக்கொண்டு உள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை சேர்ந்த ஊழியர்கள் இந்த தேதிக்குப்பிறகு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை கோர முடியாது என்றும் கூறியுள்ளது. பல்வேறு காரணங்களால் ஒருங்கிணைந்த ஒய்வூதிய திட்டத்தை ஆன்லைன் வழியாக தேர்வு செய்ய முடியாதவர்கள், மேற்படி காலக்கெடுவுக்குள் தங்களுக்கு சம்பந்தப்பட்ட பொறுப்பு அலுவலகத்தில் முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவத்தை நேரடியாக சமர்ப்பிக்கலாம் என்றும் நிதியமைச்சகத்தின் அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.






