காவிரியில் 31. 24 டி.எம்.சி. நீர் திறக்க ஒழுங்காற்றுக் குழு உத்தரவு

நாளை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 41-வது கூட்டம் நடைபெற உள்ளது.
காவிரியில் 31. 24 டி.எம்.சி. நீர் திறக்க ஒழுங்காற்றுக் குழு உத்தரவு
Published on

புதுடெல்லி,

காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 117வது கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் இன்று காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர் வளத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

தமிழக அரசு சார்பில் பங்கேற்ற பிரதிநிதிகள் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரி வழியாக தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கு 31.24 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என தெரிவித்தனர். ஆனால் கர்நாடகா அரசு சார்பில் பங்கேற்ற பிரதிநிதிகள் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி ஜூன் மாதத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை விட கூடுதலாகவே கர்நாடகா காவிரியில் திறந்து விட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக ஜூன் மாதம் தமிழகத்திற்கு 9.19 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் கர்நாடகா அதைவிட கூடுதலாக 16 டி.எம்.சி க்கும் அதிகமான தண்ணீரை திறந்து விட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கர்நாடகாவில் பெய்த தொடர் மழை காரணமாக உபரி நீர் மட்டுமே திறந்து விடப்பட்டதாகவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி நீர் திறக்கப்பட வேண்டும் என தமிழக அரசு தரப்பு தெரிவித்தது.

இதனையடுத்து தமிழகத்திற்கு ஜூலை மாதம் வழங்க வேண்டிய 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா தடையின்றி வழங்க வேண்டும் என கர்நாடகா அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டது. இன்று டெல்லியில் காணொளி காட்சி மூலம் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் நாளைய தினம் காவிரி நீர் மேலாண்மை ஆணைய 41 கூட்டம் நாளை கூட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com