

பட்டமளிப்பு அணிவகுப்பு
இந்திய விமானப்படையை பலப்படுத்தும் நோக்கத்தில் 36 ரபேல் போர் விமானங்களை ரூ.59 ஆயிரம் கோடியில் வாங்குவதற்கு பிரான்ஸ் நாட்டுடன் மத்திய அரசு 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் போட்டது.இந்த விமானங்கள் இந்தியா
வரத்தொடங்கி விட்டன. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பிரான்ஸ், 36 ரபேல் போர் விமானங்களையும் இந்தியாவிடம் வழங்கி முடித்து விடும் என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கடந்த பிப்ரவரி மாதம் தெரிவித்தார்.இந்த நிலையில் ஐதராபாத் அருகே தண்டிக்கல் என்ற இடத்தில் விமானப்படை அகாடமியில், ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பு நேற்று நடந்தது. இந்த அணிவகுப்பை விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா பார்வையிட்டார்.
ரபேல் விமானங்கள் படையில் சேர்ப்பு
அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
36 ரபேல் போர் விமானங்களும் அடுத்த ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்த்துக்கொள்ளப்படும். இதுதான் முழுமையான இலக்கு ஆகும். இதை நான் ஏற்கனவே குறிப்பிட்டும் உள்ளேன். ஒன்றல்லது இரண்டு விமானங்கள் கொரோனா தொற்று பிரச்சினையால் வருவது சற்றே தாமதிக்கலாம். ஆனால் விமானங்களை அவர்கள் சப்ளை செய்வது உரிய நேரத்தில் நடந்து முடியும்.எனவே ரபேல் போர் விமானங்களை விமானப்படையில் நாங்கள் திட்டமிட்டபடி சேர்த்துக்கொள்வோம்.
லடாக் நிலவரம்
கிழக்கு லடாக்கில் இந்திய சீன எல்லையில் நிலைமை எவ்வாறு இருக்கிறது என்று கேட்கிறீர்கள். இந்தப் பிரச்சினையில் இரு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எங்கள் முதல் முயற்சி என்பது பேச்சு வார்த்தையைத்
தொடர்வதும், எஞ்சியுள்ள மோதல் பகுதிகளில் படைகளை விலக்கிக்கொள்வதும்தான். அதன்பின்னர் பதற்றம் தணிந்து விடும். இருப்பினும், கள நிலவரங்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகின்றன. விடப்பட்ட இடங்களில் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்கின்றனவா என்பதையும் கண்காணித்து வருகிறோம்.எங்கள் தரப்பில் என்ன நடவடிக்கைகள் தேவையோ, அதை நாங்கள் எடுக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிவேக பாதுகாப்பு சவால்கள்
தொடர்ந்து ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பு நிகழ்ச்சியின்போது விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா பேசியதாவது:-
இந்திய விமானப்படையில் மிக முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதிநவீன தொழில்நுட்பங்கள் படையில் சேர்க்கப்படுகின்றன. எங்கள் செயல்பாடுகளில் சண்டையிடும் சக்தி, இப்போது இருப்பதைப்போல முன் எப்போதும் இருந்தது இல்லை. முன் எப்போதும் இல்லாத வகையில், அதிவேகமாக பாதுகாப்பு சவால்களை நாங்கள் சந்தித்து வருகிறோம். இன்னொருபுறம் நமது அண்டை நாடுகளிலும், அதற்கு அப்பாலும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மையை சந்திக்க வேண்டியதிருக்கிறது.
முக்கிய பங்கு நிரூபணம்
கடந்த சில தசாப்தங்களாக எந்தவொரு மோதலிலும் வெற்றியை அடைவதில் விமானப்படையின் முக்கிய பங்கு நிரூபணமாகி வருகிறது. இந்த பின்னணியில் இந்திய விமானப்படையின் தற்போதைய திறன்மேம்பாடு மிகப்பெரியது.
இவ்வாறு அவர் பேசினார்.