கர்நாடகத்தில் கடந்த 2½ ஆண்டுகளில் நடந்த ரெயில் விபத்துகளில் 3,500 பேர் சாவு

கர்நாடகத்தில் கடந்த 2½ ஆண்டுகளில் நடந்த ரெயில் விபத்துகளில் 3,500 பேர் பலியாகி உள்ளனர். ஆண்டுக்கு சராசரியாக 1,200 நபர்கள் உயிர் இழந்து வருவது தெரியவந்துள்ளது.
கர்நாடகத்தில் கடந்த 2½ ஆண்டுகளில் நடந்த ரெயில் விபத்துகளில் 3,500 பேர் சாவு
Published on

பெங்களூரு:-

கர்நாடகத்தில் 3,500 பேர் பலி

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே நடந்த ரெயில் விபத்தில் 275 பேர் உயிர் இழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த ரெயில் விபத்தில் காயம் அடைந்திருந்தார்கள். இந்த கோர ரெயில் விபத்து சம்பவம் நாட்டையே உலுக்கி இருக்கிறது. ரெயில் விபத்துக்கான சரியான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நாசவேலையில் ஈடுபட்டு இருக்கலாம் என்பதால், சி.பி.ஐ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ரெயில்வே துறையிலும் தொழில் நுட்பங்கள் புகுத்தப்பட்டு மாற்றங்கள் கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. ஆனாலும் இந்த ரெயில் விபத்துகளை மட்டும் தடுக்க முடியவில்லை. கர்நாடகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 3,500-க்கும் மேற்பட்டோர் ரெயில் விபத்துகளில் உயிர் இழந்திருப்பது தெரியவந்து உள்ளது.

ஆண்டுக்கு 1,200 பேர் சாவு

ஒடிசா போன்று கர்நாடகத்தில் பெரிய அளவில் ரெயில் விபத்துகள் நடைபெறாவிட்டாலும், தண்டவாளத்தை கடந்து செல்லும் போதும், ஆள் இல்லாத ரெயில்வே கேட்டுகளை கடந்து செல்லும் போதும், ரெயிலில் இருந்து இறங்கும் போதும் என பல்வேறு காரணங்களில் விபத்துகள் ஏற்பட்டு, கடந்த 2 ஆண்டுகளில் 3,500-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது ஆண்டுக்கு சராசரியாக 1,200 பேர் ரெயில் விபத்துகளில் தங்களது உயிரை பறி கொடுத்து வருகின்றனர்.

ஒரு நாளுக்கு கர்நாடகத்தில் ஒன்று அல்லது 2 பேர் ரெயில் விபத்தில் சிக்கி பலியாகி வருகிறார்கள். ஒரு மாதத்திற்கு சராசரியாக 50 முதல் 60 பேர் ரெயில் விபத்தில் உயிர் இழந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒட்டு மொத்தமாக நாடு முழுவதும் கடந்த 12 ஆண்டில் ரெயில்வே தண்டவாளத்தை தாண்டும் போதும் ரெயில் மோதி 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிர் இழந்திருக்கும் அதிர்ச்சி தகவல்களும் வெளியாகி இருக்கிறது.

தண்டவாளத்தை கடந்து செல்லும்...

ஆள் இல்லாத ரெயில்வே கேட்டுகள் தவிர, மாநிலத்தில் உள்ள முக்கியமான ரெயில் நிலையங்களில் தண்டவாளத்தை கடந்து செல்லும் போதும், ஓடும் ரெயிலில் இருந்து ஏறும் போதும், இறங்கும் போதும், செல்போன் பேசியபடி கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்கும் போதும் ரெயிலில் அடிப்பட்டு பலியானவர்கள் தான் அதிகம் என்பதும் தெரியவந்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக குடிபோதையில் தண்டவாளங்களில் படுத்து தூங்கியவர்களும் ரெயில் மோதி பலியாகி உள்ளனர்.

கர்நாடகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு 1,286 பேரும், கடந்த ஆண்டு (2022) 1624 பேரும், இந்த ஆண்டு மே மாதம் வரை 620 பேரும் ரெயிலில் அடிபட்டு பலியாகி இருக்கிறார்கள். ஒட்டு மொத்தமாக 2 ஆண்டுகளில் 3,530 பேர் பலியாகி உள்ளனர். எனவே ரெயில் விபத்துகள் நடைபெறுவதை தடுக்க ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்தாலும், பயணிகளும், மக்களும் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com