கொல்கத்தாவில் இன்று பிரதமர் மோடி தலைமையில் 35 ஆயிரம் பேர் யோகா பயிற்சி

கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு யோகா பயிற்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
கொல்கத்தாவில் இன்று பிரதமர் மோடி தலைமையில் 35 ஆயிரம் பேர் யோகா பயிற்சி
Published on

கொல்கத்தா,

சர்வதேச யோகா தினம்

உலகுக்கு இந்தியா வழங்கிய சிறந்த கொடைகளில் ஒன்று, யோகா. இந்த வாழும் கலையை மேன்மைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

அந்தவகையில் 12-வது ஆண்டாக உலகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல நாடுகளில் சிறப்பு யோகா பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

இந்தியாவிலும் வழக்கமான உற்சாகத்துடன் இந்த தினம் கொண்டாடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு 'ஆரோக்கியமான முதுமைக்கான யோகா' என்ற கருப்பொருளில் நடத்தப்படும் யோகா தின கொண்டாட்டங்களுக்காக நாடு முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

பிரதமர் மோடி

இதில் முக்கிய நிகழ்வாக பிரதமர் மோடி தலைமையில் கொல்கத்தாவில் யோகா பயிற்சி நடைபெறுகிறது. நாடு தழுவிய அமர்வாக காலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வில் முதலில் பிரதமர் மோடி உரை நிகழ்த்துகிறார். பின்னர் அவரது தலைமையில் பல்வேறு யோகா பயிற்சிகள் நடைபெ றுகிறது. இதில் அவருடன் 35 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். இதில் யோகா பயிற்சி நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொள்கின்றனர்.

அதேநேரத்தில் கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு யோகா பயிற்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முக்கிய அம்சமாக ஹூக்ளி நதியில் சிறப்பு யோகா திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதில் சுமார் 500 படகுகளில் இருந்து கொண்டு ஏராளமானோர் ஒரே நேரத்தில் யோகா பயிற்சிகளை செய்கின்றனர். மேற்கு வங்காளத்தில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய யோகா நிகழ்வு நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com