

புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், 2021 முதல் 2025-ஆம் ஆண்டுக்கு இடையிலான காலகட்டத்தில் வெளிநாடுகளில் உயிரிழந்த இந்தியத் தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை 37,740 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மரணங்களுக்கான காரணங்கள் குறித்த விவரங்கள் வழங்கப்படவில்லை.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, 2021-ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 8,234 இந்திய தொழிலாளர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-ல் இறப்பு எண்ணிக்கை 6,614 ஆகக் குறைந்ததைத் தொடர்ந்து, உயிரிழப்புகள் ஆண்டுதோறும் அதிகரித்து, 2023-ல் 7,291 ஆகவும், 2024-ல் 7,747 ஆகவும், 2025-ல் 7,854 ஆகவும் உயர்ந்துள்ளன.
இதில் 86 சதவீதத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் வளைகுடா நாடுகளில் நிகழ்ந்துள்ளன. கடந்த 5 ஆண்டு காலத்தில் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் சவூதி அரேபியாவில் முறையே 12,380 மற்றும் 11,757 இந்திய தொழிலாளர்களின் உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து குவைத் (3,890), ஓமன் (2,821), மலேசியா (1,915) மற்றும் கத்தார் (1,760) ஆகிய நாடுகளில் அதிக உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன.
மேலும் இந்த 5 ஆண்டு காலகட்டத்தில், வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களுக்கு இந்திய குடிமக்களிடம் இருந்து 80,985 புகார்கள் வந்துள்ளன. இதில் ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகபட்சமாக 2021 முதல் 2025-க்கு இடையில் 16,965 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து குவைத் (15,234), ஓமன் (13,295) மற்றும் சவூதி அரேபியா (12,988) ஆகிய நாடுகள் உள்ளன.
வளைகுடா நாடுகளை தவிர, மலேசியா மற்றும் மாலத்தீவிலும் கணிசமான எண்ணிக்கையில் தொழிலாளர் பிரச்சினைகள் பதிவாகியுள்ளன. அதன்படி மலேசியாவில் 8,333 புகார்களும், மாலத்தீவில் 2,981 புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் புகார்கள் அதிக அளவில் பதிவானபோதிலும், இந்திய தொழிலாளர்களின் உயிரிழப்புகள் குறைவாகவே இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.