

பெங்களூரு,
பெங்களூருவில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது;-
கர்நாடகத்தில் 2-வது அலையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை தொடர்ந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் தற்போது சகஜ நிலை திரும்பி இருக்கிறது. ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டு இருந்தாலும், நம்மைவிட்டு இன்னும் கொரோனா செல்லவில்லை.
இதனை மக்கள் புந்து கொள்ள வேண்டும். ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டுள்ளதால் கொரோனா விதிமுறைகளை மக்கள் எக்காரணத்தை கொண்டும் மீறக்கூடாது. முகக்கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக கொரோனா தடுப்பூசியை அனைவரும் கண்டிப்பாக போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போடுவதன் மூலம் கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். கொரோனா விதிமுறைகளை மீறியதால் தான் 2-வது அலையை சந்திக்க நேரிட்டது.
தற்போதும் ஊரடங்கில் தளர்வை பயன்படுத்தி முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் மக்கள் இருந்தால், 3-வது அலை உருவாகி, 3-வது முறை மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். 3-வது அலை உருவாவதை தடுக்க அரசும் முன் எச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகிறது.
இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.