

குடகு:
கொள்ளை
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் அன்வர். நேற்று முன்தினம் இவர் தனது நண்பர்கள் 3 பேருடன் கேரளாவில் இருந்து விராஜ்பேட்டை வழியாக குடகு மாவட்டத்திற்கு காரில் வந்து கொண்டிருந்தார். சித்தாப்புராவை அடுத்த மக்குலா கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி அருகே வந்தபோது ஆட்டோவில் வந்த 4 பேர் கும்பல் இவர்கள் காரை வழிமறித்தனர். அப்போது அந்த கும்பல் கையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதை காண்பித்து மிரட்டிய கும்பல் 3 பேரையும் வாகனத்துடன் ஐயம்பெட்டாவிற்கு அழைத்து சென்றனர். அங்கு மர்ம நபர்கள் 3 பேரையும் மிரட்டி அவர்களிடம் இருந்த ரூ.37 ஆயிரம் பணம், ஏ.டி.எம் கார்டை பறித்து கொண்டு தப்பியோடிவிட்டனர்.
4 பேர் கைது
இதுகுறித்து அன்வர் விராஜ்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று கொள்ளை வழக்கு தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் விராஜ்பேட்டையை சேர்ந்த அப்துல் ஜமீல் (28), அனிஷ் (30), சஞ்சு (25), கே.எஸ்.ரம்யா (32) என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ஆட்டோ, 4 செல்போன்கள், ரூ.31 ஆயிரம் பணம், ஒரு கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.