

புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் எம்.சீனிவாசன் என்பவர் சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், 'த.வெ.க.வுக்கு பெரும்பான்மை இல்லாததால் கடந்த 13-ந் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் த.வெ.க. அரசு வெற்றிபெற்றது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற அரசி யல் கட்சிகளிடம் குதிரை பேரம் நடைபெற்றதாக கூறப்படும் புகார் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், குதிரைபேரத்தை தடுக்க உரிய விதிகளை சுப்ரீம் கோர்ட்டு வகுக்கும் வரை, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களாக இருந்து பதவி விலகி த.வெ.க.வில் சேர்ந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் இடைத்தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில் மேற்கண்ட 4 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சார்பில் வக்கீல் ராம் சங்கர் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 'இடைத்தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரி தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்கும்போது தங்களது தரப்பு கருத்தைக் கேட்காமல் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க கூடாது' என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.