4 கால்கள்; சிறுவனுக்கு நடந்த அறுவை சிகிச்சை வெற்றி - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சாதனை


4 கால்கள்; சிறுவனுக்கு நடந்த அறுவை சிகிச்சை வெற்றி -  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சாதனை
x

Courtesy: PTI

தினத்தந்தி 26 Feb 2025 9:11 PM IST (Updated: 26 Feb 2025 9:12 PM IST)
t-max-icont-min-icon

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 4 கால்களை கொண்ட 17 வயது சிறுவனுக்கு நடந்த அறுவை சிகிச்சை வெற்றியடைந்து உள்ளது.

புதுடெல்லி,

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிக்கலான உடல் பாதிப்புடன் 17 வயது சிறுவன் ஒருவன் சிகிச்சைக்காக வந்துள்ளான். உத்தர பிரதேசத்தின் பலியா நகரை சேர்ந்த அந்த சிறுவன் பிறக்கும்போது, 4 கால்கள் இருந்துள்ளன. வழக்கம்போல் உள்ள 2 கால்களுடன், சிறுவனின் வயிற்றில் 2 கால்கள் இணைந்தபடி இருந்துள்ளன. இதனை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.

இதுபற்றி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை துறையின் கூடுதல் பேராசிரியரான, டாக்டர் அசூரி கிருஷ்ணா கூறும்போது, 1 கோடி பேரில் ஒருவருக்கு என்ற அளவிலேயே இதுபோன்று ஏற்படும் என்றார்.

அவர் தொடர்ந்து கூறும்போது, கருத்தரிக்கும்போது, இரட்டை குழந்தைகள் உருவானால் அவற்றில் ஒன்று வளர முடியாமல் போகும்போது, அதன் உடல் பாகங்கள் மற்றொரு குழந்தையுடன் ஒட்டி கொள்ளும். உலகம் முழுவதும் இதுவரை 42 பேர் 4 கால்களுடன் பிறந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

வயிற்றில் ஒட்டியபடி இருந்த 2 கால்களால் அந்த சிறுவனின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது. அது வருங்காலத்தில் பிற உறுப்புகளையும் கூட பாதிக்கலாம் என டாக்டர்கள் குழு தெரிவித்தது.

அந்த சிறுவன் 8-ம் வகுப்புக்கு சென்றபோது, உடன் படித்தவர்கள் கேலியும் கிண்டலும் செய்ததில் மனதளவில் பாதிக்கப்பட்டு, பள்ளி படிப்பை தொடர முடியாமல் போயுள்ளது. இந்நிலையில், அந்த சிறுவனுக்கு நடந்த அறுவை சிகிச்சை வெற்றியடைந்து உள்ளது. இதனால், மேற்கொண்டு படிப்பை தொடர கூடிய சூழல் ஏற்பட்டு உள்ளது.

1 More update

Next Story