

பெங்களூரு,
தென்ஆப்பரிக்காவில் இருந்து பன்னரகட்டா உயிரியல் பூங்காவுக்கு 4 சிவிங்கி புலி வந்துள்ளன. அவற்றை வனத்துறை மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே வரவேற்றார். வனவிலங்குகள் பரிமாற்றம் வெளிநாடுகளில் இருந்து வனவிலங்குகள் பரிமாற்றத்தின் அடிப்படையில் சிவிங்கி புலிகள், புலி உள்ளிட்ட விலங்குகள் இந்தியாவில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. சமீபத்தில் மத்திய அரசின் 'புரா ஜெக்ட் சீட்டா' என்ற பெயரில் நமீபியா, தென்ஆப்பிரிக்காவில் இருந்து கடந்த 2022-ம் ஆண்டு 20 சிவிங்கி புலிகள் மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டன.
இந்த நிலையில் மத்திய அரசின் விலங்குகள் பரிமாற்றத்தின் அடிப்படை யில் தென்ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு பன்னரகட்டா உயிரியல் பூங்காவுக்கு சிவிங்கி புலிகளை மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி தென்ஆப்பிரிக்காவில் இருந்து 2 ஆண், 2 பெண் என 4 சிவிங்கி புலிகள் விமானம் மூலம் பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த சிவிங்கி புலிகள் பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் வந்து இறங்கின. அவற்றை வனத்துறை மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே வரவேற்றார். பின்னர் அந்த சிவிங்கி புலிகள் லாரிகள் மூலம் பன்னரகட்டா உயிரியல் பூங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பன்னரகட்டா பூங்காவுக்கு வந்த 4 சிவிங்கி புலிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் உடல் நலமும், நடமாட்டமும் உயிரியல் பூங்காவின் டாக்டர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 40 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு அந்த சிவிங்கி புலிகள் விடப்படும். கடந்த 2022-ம் ஆண்டு நமீபியா, தென்ஆப்பிரிக்காவில் இருந்து மத்தியபிரதேசத்துக்கு கொண்டு வரப்பட்ட 20 சிவிங்கி புலிகளில் 10 சிவிங்கி புலிகள் செத்துவிட்டன. ரேடியோ காலர்கள் பொருத்தப்பட்டதால், அதனால் ஏற்பட்ட தோல் தொற்று, கடும் வெப்பம், வானிலை மற்றும் தங்களுக்குள் சண்டையிட்டதால் அவை செத்தன. இதனால் இந்த தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு சிறுத்தைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே உத்தரவிட்டுள்ளார்.