

திருவனந்தபுரம்,
கேரளம் மாநிலம் இயற்கை அழகு சூழ்ந்து காணப்படுவதால் 'கடவுளின் தேசம்' என அழைக்கப்படுகிறது. அதே சமயம் இந்தியாவில் மேற்கு வங்காளத்துக்கு பிறகு விஷ பாம்புகள் அதிகம் இருக்கும் மாநிலங்களில் 2-வது இடத்தில் கேரளம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 12 ஆயிரம் மக்கள் பாம்புக்கடியால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் கேரளத்தில் கடந்த ஒரு வாரத்தில் பாம்புக்கடியால் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். காயம்குளம் மாவட்டம், செரவல்லியை சேர்ந்த பெண் பாம்புக்கடியால் உயிரிழந்தார். அவருக்கு விஷ முறிவு மருந்து கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டதாக குற்றம்சாட்டி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவனந்தபுரம் மாவட்டம், சிராயின்கீழ் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவன் தூங்கிக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்ததில் உயிரிழந்தான்.
திருச்சூர் மாவட்டம் கோடாலி பகுதியில் 8 வயது சிறுவனும், அவனது சகோதரனும் தங்கள் படுக்கையறையில் உறங்கி கொண்டிருந்தபோது கட்டுவிரியன் கடித்தது. இதில் 8 வயது சிறுவன் உயிரிழந்தான். அவனது சகோதரன் மருத்துவமனையயில் சிகிச்சை பெற்று வருகிறான். அந்த சிறுவனின் வீட்டில், வனத்துறை அதிகாரிகள், பாம்பு மீட்பு தன்னார்வலர்கள் குழுவுடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வளாகத்தில் 5 பாம்புகள் காணப்பட்டன.
கடுமையான கோடை வெப்பம் காரணமாக நிழல், குளிர்ச்சியான சூழல் மற்றும் இரைகளை தேடி பாம்புகள் வீடுகளுக்குள் நுழையக்கூடும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.