4 மாநில சட்டமன்ற இடைத்தேர்தல்; 2 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை


4 மாநில சட்டமன்ற இடைத்தேர்தல்; 2 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை
x

குஜராத்தின் விசாவதார் மற்றும் பஞ்சாபின் லூதியானா மேற்கு தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகிக்கிறது.

புதுடெல்லி,

குஜராத், கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 19-ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்காக, அந்தந்த தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன. கடந்த 17-ம் தேதி மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.

இதனை தொடர்ந்து, குஜராத்தின் விசாவதார் மற்றும் காடி ஆகிய 2 தொகுதிகளுக்கும், கேரளாவின் நிலாம்பூர், மேற்கு வங்காளத்தின் காளிகஞ்ச், பஞ்சாபின் லூதியானா மேற்கு ஆகிய 3 தொகுதிகளுக்கும் என மொத்தம் 5 தொகுதிகளுக்கு கடந்த 19-ந்தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடந்தது.

அன்று மாலை 6 மணியளவில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இவற்றில் ஒரு சில மையங்களை தவிர, அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்கு சாவடி மையங்களில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. பதிவான வாக்குகள் வரும் 23-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில், மாலை 5 மணி வரை பதிவான வாக்கு சதவீத விவரமும் வெளிவந்தது. இதில், மேற்கு வங்காளத்தின் காளிகஞ்ச் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் 69.85 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோன்று, அதிக அளவாக நிலாம்பூர் தொகுதியில் 70.76 சதவீத வாக்குகளும், குஜராத்தின் விசாவதார் மற்றும் காடி ஆகிய 2 தொகுதிகளில் முறையே 54.61 மற்றும் 54.49 சதவீத வாக்குகளும், பஞ்சாபின் லூதியானா மேற்கு தொகுதியில் 49.07 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தன.

இந்த நிலையில், 5 தொகுதிகளில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வாக்குசாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த சூழலில், ஒவ்வொரு தொகுதியிலும் கட்சிகளின் முன்னணி நிலவரம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. குஜராத்தின் விசாவதார் மற்றும் பஞ்சாபின் லூதியானா மேற்கு தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகிக்கிறது.

இதேபோன்று, மேற்கு வங்காளத்தின் காளிகஞ்ச் தொகுதியில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. குஜராத்தின் காடி தொகுதியில் ஆளும் பா.ஜ.க.வும், கேரளாவின் நிலாம்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை வகிக்கின்றன.

1 More update

Next Story