

அம்பாலா,
அரியானா மாநிலம் அம்பாலா அருகே உள்ள தனுவூரா கிராமத்தில், 220 அடி ஆழமுள்ள திறந்த ஆழ்துளைக் கிணற்றில் 4 வயது சிறுவன் தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை, அந்த சிறுவன் தனது தந்தையுடன் வயலில் வேலை செய்து கொண்டிருந்த தாத்தாவுக்கு உணவு கொண்டு சென்றிருந்தான். தாத்தா சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திறந்திருந்த ஆழ்துளைக் கிணற்றின் அருகே சென்று மண்ணை உள்ளே போட்டுக் கொண்டிருந்தான்.
அப்போது கிணற்றுக்குள் எட்டிப் பார்க்க முயன்றபோது, ஈரமான மண்ணில் கால் வழுக்கியதால் சிறுவன் எதிர்பாராதவிதமாக 220 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் விழுந்தான்.
இதனையடுத்து சிறுவனின் தந்தை, தாத்தா மற்றும் கிராம மக்கள் உடனடியாக மீட்க முயன்றனர். ஆனால், அது முடியாததால் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்ததும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அஜய் சிங் தோமரும் சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
தற்போது தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) வீரர்கள் அதிநவீன கருவிகளின் உதவியுடன் சிறுவனை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சிறுவனை பாதுகாப்பாக மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.