இறந்துபோன பாட்டிக்கு திதி கொடுத்து படையலிட ஆமைகளை வேட்டையாடிய 4 வாலிபர்கள் கைது

ஆற்றின் கரையில் வாலிபர்கள் 4 பேர் ஆமைகளை கொன்று அவற்றை சமைத்து கொண்டிருப்பதை போலீசார் பார்த்தனர்.
இறந்துபோன பாட்டிக்கு திதி கொடுத்து படையலிட ஆமைகளை வேட்டையாடிய 4 வாலிபர்கள் கைது
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியில் சோமாவதி ஆறு உள்ளது. இந்தநிலையில், பெல்தங்கடி போலீசாருக்கு நேற்று முன்தினம் சோமா வதி ஆற்றில் சிலர் ஆமைகளை வேட்டையாடி அதன் இறைச்சியை சமைத்து சாப்பிடுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு விரைந்து சென்ற போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.

அப்போது, ஆற்றின் கரையில் வாலிபர்கள் 4 பேர் ஆமைகளை கொன்று அவற்றை சமைத்து கொண்டிருப்பதை போலீசார் பார்த்தனர். இதையடுத்து, அவர்களை மடக்கிப்பிடித்த போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். அவர்கள் சமைத்த, தீயில் கருகிய நிலையில் இருந்த 4 ஆமைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர், அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் 4 பேரின் பாட்டியான தேவம்மா என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். அவருக்கு திதி கொடுப்பதற்காக சோமாவதி ஆற்றங்கரைக்கு சென்ற 4 பேரும் அங்கு அவரின் விருப்ப உணவான ஆமைக்கறியை வைத்து திதி கொடுத்தால், ஆத்மா சாந்தி அடையும் என நினைத்துள்ளனர்.

இதனால் அவர்கள் 4 பேரும் ஆற்றில் இருந்து 4 ஆமைகளை வேட்டை யாடி, அவற்றை கொன்று சமையல் செய்து படையலிட முடிவு செய்து, பிடிபட்ட ஆமைகளை தீயில் வாட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து, பெல்தங்கடி போலீசார் அவர்கள் 4 பேரையும், ஆமைகளையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் 4 பேரிடமும் விசாரணை நடத்திய வனத்துறையினர், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், அவர்களுக்கு கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் வழங்கிய வனத்துறையினர், 4 பேரையும் விடுதலை செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com