பூமி பூஜையின் 2-ம் ஆண்டு நிறைவு ராமர் கோவிலின் 40 சதவீத கட்டுமான பணி முடிவடைந்தது அறக்கட்டளை நிர்வாகி பேட்டி

அயோத்தி ராமர் கோவிலின் 40 சதவீத கட்டுமான பணி முடிவடைந்தது என்று ராம ஜென்மபூமி அறக்கட்டளை நிர்வாகி கூறினார்.
பூமி பூஜையின் 2-ம் ஆண்டு நிறைவு ராமர் கோவிலின் 40 சதவீத கட்டுமான பணி முடிவடைந்தது அறக்கட்டளை நிர்வாகி பேட்டி
Published on

அயோத்தி,

அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. கட்டுமான பணிகளை கவனிக்க ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டது.

அதையடுத்து 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜை நடந்தது. பிரதமர் மோடி கலந்து கொண்டு பூமி பூஜை நடத்தி வைத்தார். அடிக்கல் நாட்டினார். இப்பணி முடிவடைந்து நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தன.

இதையொட்டி, ராமஜென்ம பூமி அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத்ராய் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கடந்த 2 ஆண்டுகளாக எவ்வளவோ முட்டுக்கட்டைகளை சந்தித்தோம். கொரோனா காலம், பெரிய சவாலாக இருந்தது. அதையும் மீறி, கட்டுமான பணி தடையின்றி நடந்தது. 40 சதவீத கட்டுமான பணி முடிவடைந்துள்ளது.

கோவில் கட்டுமான பணி செலவாக ரூ.11 கோடி நிர்ணயித்து இருந்தோம். பூமி பூஜையை தொடர்ந்து வர ஆரம்பித்த நன்கொடை இப்போதும் வந்து கொண்டிருக்கிறது. முன்பு, நாள் ஒன்றுக்கு ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வந்தது. தற்போது, ரூ.35 லட்சம் ரூ.40 லட்சம் வரை வருகிறது.

காசோலை, ரொக்கப்பணம் மட்டுமின்றி ஆன்லைன் மூலமாகவும் நன்கொடை வருகிறது. நன்கொடை ரூ.5 ஆயிரம் கோடியை தாண்டி விட்டது. தங்கம், வெள்ளியாகவும் நன்கொடை கிடைக்கிறது. பூமி பூஜைக்கு பிறகு பிரபலங்கள் இப்போதும் வந்து ராமஜென்ம பூமியில் தரிசனம் செய்து வருகிறார்கள்.

பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மட்டுமின்றி, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பல்வேறு மாநிலங்களின் கவர்னர்கள், முதல்-மந்திரிகள், சினிமா நட்சத்திரங்கள், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் ஆகியோரும் வழிபட்டு சென்றுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com