

சிக்கமகளூரு,
சித்ரதுர்கா மாவட்ட துணை கலெக்டர் அலுவலகத்தில் முதலாம் நிலை அதிகாரியாக பணியாற்றி வருபவர் பசவராஜ். இவரை, ஒசதுர்கா தாலுகா செல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அனுமந்தப்பா அணுகினார். அப்போது அவர் தனது தந்தை இறந்து விட்டதாகவும், அவரது பெயரில் உள்ள நிலப்பட்டாவின் வரைபடம் தனக்கு வேண்டும் என்றும் கூறினார். அவரின் கோரிக்கையை ஏற்ற அதிகாரி பசவராஜ், ரூ.40 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் நில வரைபடத்தை தருவதாக தெரிவித்தார்.
முதலில் லஞ்சம் கொடுக்க அனுமந்தப்பா ஒப்புக்கொண்டார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் இதுபற்றி மாவட்ட லோக் அயுக்தா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகள் அடங்கிய ரூ.40 ஆயிரத்தை கொடுத்து, அதை அதிகாரி பசவராஜிடம் கொடுக்குமாறு கூறினர். அதன்பேரில் அனுமந்தப்பாவும், அதிகாரி பசவராஜை சந்தித்து ரூ.40 ஆயிரம் லஞ்சப்பணத்தை கொடுத்தார், அவரும் வாங்கினார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லோக் அயுக்தா போலீசார் அதிகாரி பசவராஜை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிந்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.