தெலுங்கானாவில் 41 மாவோயிஸ்டுகள் போலீசில் சரண்


தெலுங்கானாவில் 41 மாவோயிஸ்டுகள் போலீசில் சரண்
x

2025-ம் ஆண்டில் மட்டும் மாவோயிஸ்டு அமைப்பின் 509 உறுப்பினர்கள், தெலுங்கானா போலீசில் சரண் அடைந்து உள்ளனர்.

ஐதராபாத்,

தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கடந்த அக்டோபரில் பேசும்போது, வன்முறையை கைவிட்டு விட்டு, மாநிலத்தின் வளர்ச்சி பணிகளில் பங்காற்றும்படி மாவோயிஸ்டு உறுப்பினர்களை வலியுறுத்தினார். இந்நிலையில், தெலுங்கானாவில் டி.ஜி.பி. முன்னிலையில் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு, 41 மாவோயிஸ்டுகள் இன்று சரண் அடைந்தனர்.

முதல்-மந்திரி விடுத்த வேண்டுகோளின் தொடர்ச்சியாக இந்த சரணடைதல் நிகழ்ந்துள்ளது. பாதுகாப்பு படையினரின் தொடர் நெருக்கடி, ஆயுத விநியோகம் குறைந்து போனது, அமைப்புக்குள்ளேயே பூசல் ஏற்படுதல், கருத்து வேற்றுமைகள் மற்றும் வன பகுதிகளில் கடுமையான சூழலில் வாழ்தல் போன்ற பல காரணங்களால் அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர் என கூறப்படுகிறது.

தெலுங்கானா அரசின் மறுவாழ்வு கொள்கையின் கீழ், அவர்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை நிதியுதவி அளிக்கப்படும். 41 மாவோயிஸ்டுகளுக்கு மொத்தம் ரூ.1.46 கோடி வழங்கப்படும். இடைக்கால நிவாரண நிதியாக அனைவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் பணம் முன்பே வழங்கப்பட்டு விட்டது என போலீசார் தெரிவித்தனர்.

அவர்கள் இன்சாஸ் வகை இயந்திர துப்பாக்கி, ஏ.கே.-47 ரக துப்பாக்கிகள், துப்பாக்கி தோட்டாக்கள் என பல்வேறு வகையை சேர்ந்த மொத்தம் 24 ஆயுதங்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

2025-ம் ஆண்டில் மட்டும், மாவோயிஸ்டு அமைப்பில் பல்வேறு பதவிகளை வகித்த 509 உறுப்பினர்கள், தெலுங்கானா போலீசில் சரண் அடைந்து உள்ளனர். இது அந்த அமைப்பின் நிலையான வீழ்ச்சியை காட்டுகிறது என டி.ஜி.பி. கூறினார்.

1 More update

Next Story