5 மாநில தேர்தல்: பிரசார கூட்டங்களுக்கு தடை போட 41 சதவீதத்தினர் கருத்துக்கணிப்பில் ஆதரவு..!!

5 மாநில சட்டசபை தேர்தலில் பிரசார கூட்டங்களுக்கு தடை போட 41 சதவீதத்தினர் ஆதரவு தெரிவித்து இருப்பது ஒரு கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

பா.ஜ.க. ஆளுகிற உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மற்றும் காங்கிரஸ் ஆட்சி நடக்கிற பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகளை தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் (8-ந் தேதி) அறிவித்தது.

இதன்படி மத்தியில் எந்த கட்சி ஆள வேண்டும் என்பதை தீர்மானிக்கிற முக்கிய இடத்தில் உள்ள உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் 10-ந் தேதி தொடங்கி மார்ச் மாதம் 7-ந் தேதி வரை 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

உத்தரகாண்ட், பஞ்சாப், கோவாவில் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 14-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது. மணிப்பூரில் அடுத்த மாதம் 27-ந் தேதியும், மார்ச் மாதம் 3-ந் தேதியும் 2 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் கொரோனா காலத்தையொட்டி கடுமையான கட்டுப்பாடுகளை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. குறிப்பாக வரும் 15-ந் தேதி வரையில் தேர்தல் பிரசார கூட்டங்கள், பேரணிகள், தெருமுனை கூட்டங்கள் நடத்த தடை செய்யப்பட்டுள்ளன.

இந்த தருணத்தில் தேர்தல் தொடர்பாக தேர்தல் நடைபெற உள்ள 5 மாநில மாவட்டங்கள் உள்பட 309 மாவட்டங்களில் லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற டிஜிட்டல் சமூக தளம், ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அது வருமாறு:-

* அனைத்து அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களுக்கும் தடை விதிக்கலாம் என 41 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர்.

* உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் என 5 மாநிலங்களிலும் தேர்தலை ஒத்தி போடுவதற்கு 31 சதவீதத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

* 24 சதவீதத்தினர் தேர்தல் பிரசாரங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும், அவை தொடரவும் வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

* தேர்தலால் கொரோனா பரவும் ஆபத்து குறைவாக இருப்பதால் எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்று 4 சதவீதத்தினர் கூறி உள்ளனர்.

இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 68 சதவீதத்தினர் ஆண்கள், எஞ்சிய 32 சதவீதத்தினர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com