

புதுடெல்லி,
டெல்லியில் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் வசிக்கும் சுபம் அவஸ்தி மற்றும் 2 பேர், வக்கீல் நாராயண் சர்மா மூலம் டெல்லி ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடுத்துள்ளனர்.
அந்த வழக்கில் அவர்கள், டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தியபோது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், டெல்லி போலீசுக்கும் உத்தரவிடவேண்டும் என கோரி உள்ளனர்.
அந்த வழக்கு, தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோரின் அமர்வு முன்னில்லையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது குடியரசு தினத்தன்று நடந்த வன்முறை தொடர்பாக சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் பிரிவுகள் அடிப்படையில் 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 13 வழக்குகள் டெல்லி சிறப்பு போலீஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளன, இந்த வழக்குகளில் கணிசமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.