

பெங்களூரு,
கர்நாடகத்தின் தும்கூரு மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் மயில்கள் திடீரென இறந்தன. இதன் காரணம் தெரியாத நிலையில், அவற்றின் உடல்கள் ஆய்வுக்காக போபாலில் உள்ள தேசிய உயர்பாதுகாப்பு விலங்கு நோய்கள் மையத்துக்கு அனுப்பப்பட்டன.
அதன் ஆய்வறிக்கையில், இறந்த 44 மயில்களும் எச்5என்1 (H5N1) வகை பறவைக் காய்ச்சலால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- தும்கூரு மாவட்டத்தின் குலூர் ஒன்றியத்துக்குட்பட்ட ஹுல்லேனஹள்ளி, பைரசந்திரா கிராமங்கள் மற்றும் உர்டிகெரே ஒன்றியத்துக்குட்பட்ட பொம்மனஹள்ளி, ஹோலிஹள்ளி கிராமங்களில் ஏப்ரல் 16 முதல் 21ஆம் தேதி வரை 44 மயில்கள் இறந்தன. அவற்றின் உடல்களை பரிசோதித்ததில் பறவைக் காய்ச்சல் காரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து உயிரியல் பூங்காக்கள், சாலைகள், சரணாலயங்கள், மாகடி ஏரி, கொக்கரே பெல்லூர் சமூகப் பறவைகள் சரணாலயம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், உள்ளூர் அல்லது வெளிநாட்டு பறவைகள் இறந்தால் உடனடியாக அவற்றின் உடல்களை சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என வனத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.