

திருவனந்தபுரம்,
தமிழ்நாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசில் 2021-ல் அறிமுகப்படுத்த மகளிருக்கான இலவச விடியல் பேருந்து திட்டத்தைப் போன்று, கேரள சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி, அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் என்ற வாக்குறுதியை அளித்தது.
இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கேரளத்தில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசு, இந்திரா உத்தரவாதத் திட்டத்தின் கீழ் பெண்களுக்காக 'பிரியதர்ஷினி திட்டம்' என்ற இலவச பேருந்துப் பயணத் திட்டத்தை கடந்த ஜூன் 15 ஆம் தேதி திருவனந்தபுரம் தம்பானூர் பேருந்து நிலையத்தில் கேரள முதல்-மந்திரி வி.டி. சதீசன் தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் திருநங்கைகள் கேரள அரசு பேருந்துகளில் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
தலைநகர் திருவனந்தபுரத்தில் மட்டும் 687 சாதாரண பேருந்துகளும், ஒட்டுமொத்த தென் மாவட்டங்களில் 1,268 சாதாரண பேருந்துகள் இயங்குவதால், பெண்கள் அதிகளவில் பயணடைவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. கேரளம் முழுவதும் மொத்தமாக 3,125 பேருந்துகள் மகளிருக்கு இலவசமாக இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், கேரளத்தில் தனியார் போக்குவரத்து நிறுவனங்களின் வருவாயை பெரிதும் பாதித்து, தங்களை கடுமையான பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளியுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், அரசுக்கு எதிராக வருகிற ஜூலை 20 ஆம் தேதி முதல் கேரளத் தலைமைச் செயலகம் முன் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தனியார் பேருந்து நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இந்தநிலையில், கேரளாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தை எதிர்த்து, காஸர்கோடு மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் இன்று அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.
சுமார் 450 தனியார் பேருந்துகள் ஸ்டிரைக்கில் பங்கேற்றன. அரசுப் பேருந்து சேவை இல்லாத மலைக் கிராமப் புறங்களில் பயணிகள் கடும் பாதிப்பு அடைந்தனர். தொடர் நஷ்டம் காரணமாக பல வழித்தடங்களில் சேவையை நிறுத்தவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அம்மாநில போக்குவரத்துதுறை மந்திரி சி.பி. ஜான், இதுதொடர்பாக தனியார் பேருந்து நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.