

புதுடெல்லி,
வருமான வரித்துறையின் புதிய இணையதளம் மூலமாக நேற்று முன்தினம் (27-ந் தேதி) வரையிலான நிலவரப்படி 4.67 கோடிக்கும் அதிகமானோர் 2021-22 நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். 27-ந் தேதியன்று மட்டும் 15 லட்சத்து 49 ஆயிரம் வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வருகிற 31-ந் தேதியை எட்டும்போது, இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3.91 கோடி வருமான வரி கணக்குகள் சரிபார்க்கப்பட்டுள்ளன. இதில் 3.35 கோடிக்கும் அதிகமான வருமான வரி கணக்குகள் ஆதார் தொடர்புடைய ஓ.டி.பி. (ஒரு முறை அனுப்பும் கடவுச்சொல்) மூலமாக சரிபார்க்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை இணையதளம் மூலம் கடந்த 3 நாட்களில் 27.7 லட்சம் ஆதார் ஓ.டி.பி. வேண்டுகோள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இணையதளம் மூலமாக சரிபார்க்கப்பட்ட 2.88 கோடி வருமான வரி கணக்குகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ரூ.1.07 கோடிக்கும் அதிகமான திரும்ப செலுத்தத்தக்க தொகை வழங்கப்பட்டுள்ளது.
வருமான வரி கணக்கை தாமதமின்றி தாக்கல் செய்யுமாறு இ-மெயில், எஸ்.எம்.எஸ். மூலமாக வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை நினைவூட்டி வருகிறது. வரி செலுத்துபவர்கள் தாமத கட்டணம் இன்றி விரைவாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேற்கூறிய தகவல்கள் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் செய்தித்தொடர்பாளர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.