அரசு மருத்துவமனையில் ஏ.சி வேலை செய்யாததால் ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு

அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஏ.சி வேலை செய்யாததால் ஒரே நாளில் 5 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். #GovernmentHospital
அரசு மருத்துவமனையில் ஏ.சி வேலை செய்யாததால் ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு
Published on

கான்பூர்,

உத்திரபிரதேச மாநிலத்தின் கான்பூரில், கணேஷ் சங்கர் வித்யார்த்தி நினைவு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
அங்குள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐந்து நோயாளிகள் ஏ.சி வேலை செய்யாததால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக அங்குள்ள அவசர சிகிச்சை பிரிவில் 4 குழந்தைகள் உட்பட 11 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். அங்கு நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக ஏ.சி இல்லாமல் நோயாளிகளால் இருக்க முடியவில்லை. நோயாளிகளின் உறவினர்கள் டேபிள் ஃபேன் வைத்துக்கொள்ள அனுமதி கேட்டனர். அதற்கு மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்து விட்டது.

இதையடுத்து புதன்கிழமை முதல் நேற்று நள்ளிரவு வரை ஏசி இல்லாமல் இருந்ததால் 5 பேர் உயிரிழந்ததாக நோயாளிகளின் உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனை நிர்வாகம் இதை மறுத்துள்ளது. 2 நோயாளிகள் மாரடைப்பு காரணமாகவும், 2 நோயாளிகள் நாள்பட்ட நோய் காரணமாகவுமே உயிரிழந்தனர் என்றும், ஏசி இல்லாத காரணத்தால் உயிரிழக்கவில்லை என்றும் மருத்துவமனையின் முதல்வர் நவ்னீத் குமார் கூறியுள்ளார். மேலும், நிர்வாகம் சார்பில், இந்திராபால் (75), கயா பிரசாத் (75), ரசுல் பாக்ஸ் (55), மற்றும் முராரி (56) ஆகியோர் இறந்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு, சில நோயாளிகள் வேறு சில மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். அந்த பழுதான ஏ.சி-யை சரி செய்யும் வரை தற்காலிகமாக இரண்டு ஏ.சிக்களை நிறுவ அதிகாரிகளுக்கு மாவட்ட மாஜிஸ்திரேட் சுரேந்திர சிங் உத்தரவிடப்பட்டுள்ளார். மேலும் மருத்துவமனைக்கு நேரில் வந்து பார்வையிட்ட மாஜிஸ்திரேட், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com