கார் விபத்தில், பிரதமர் மோடி தம்பி உள்பட 5 பேர் காயம்

மைசூரு அருகே கார் விபத்தில் பிரதமர் மோடியின் தம்பி உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கார் விபத்தில், பிரதமர் மோடி தம்பி உள்பட 5 பேர் காயம்
Published on

மைசூரு:

பிரதமர் மோடியின் தம்பி

பிரதமர் நரேந்திர மோடியின் தம்பி பிரகலாத் மோடி (வயது 69). இவர் தனது குடும்பத்துடன் கர்நாடகத்துக்கு சுற்றுலா வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று பிரகலாத் மோடி, தனது மகன் மற்றும் மருமகள், பேரக்குழந்தை ஆகியோருடன் காரில் பெங்களூருவில் இருந்து சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் உள்ள பந்திப்பூர் வனப்பகுதிக்கு சுற்றுலா சென்றார். காரை டிரைவர் ஓட்டினார்.

இந்த நிலையில் அவர்கள் மதியம் 1.30 மணி அளவில் மைசூரு அருகே கடகோளா பகுதியில் சென்றபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர தடுப்பு சுவரில் மோதியது. இதில் காரின் முன்பகுதி சேதம் அடைந்தது.

5 பேர் படுகாயம்

இந்த விபத்தில் பிரகலாத் மோடி, அவரது மகன், மருமகள், பேத்தி மற்றும் கார் டிரைவர் ஆகிய 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் 5 பேரும் மைசூரு ஜே.எஸ்.எஸ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து நடந்ததும் காரில் இருந்த விபத்து தடுப்பு பலூன் வெளியே வந்ததால் அதிர்ஷ்டவசமாக பெரிய அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு சீமா லட்கர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். இதுகுறித்து கடகோளா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிவராத்திரி தேசிகேந்திர சுவாமி

இந்த நிலையில் ஜே.எஸ்.எஸ். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடியை சுத்தூர் மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திர சுவாமி, ராமதாஸ் எம்.எல்.ஏ., பிரதாப் சிம்ஹா எம்.பி. ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இதையடுத்து பிரதாப் சிம்ஹா எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'சுற்றுலா வந்த பிரதமர் மோடியின் தம்பி குடும்பத்தினருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு லேசான காயம் தான் ஏற்பட்டுள்ளது. பிரகலாத் மோடி நலமாக இருக்கிறார். அனைவரும் நலமாக இருக்கிறார்கள். சிகிச்சைக்காக இன்று (நேற்று) மட்டும் ஒருநாள் அவர்கள் மருத்துவமனையில் இருப்பார்கள். சாமுண்டீஸ்வரி அம்மனின் அருளால் யாருக்கும் எதுவும் ஆகவில்லை' என்றார்.

ஜே.எஸ்.எஸ். மருத்துவமனை டாக்டர் ஒருவர் கூறுகையில், 'சிகிச்சைக்காக வந்த அவர்கள் அனைவரும் நன்றாக உள்ளனர். சிறிய காயம் தான் ஏற்பட்டுள்ளது. ரத்தப்போக்கு எதுவும் இல்லை. ஆனாலும் அவர்களுக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. இதில் குழந்தைக்கு மட்டும் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் அது பெரிய அளவில் இல்லை. தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம்' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com