

புதுடெல்லி
நாட்டில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடப்பு ஆண்டில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 15-ந்தேதி பிற்பகலில் அறிவித்தது. அவற்றுடன் 6 மாநிலங்களுக்கு இடைத்தேர்தலையும் நடத்துகிறது.
இதனை தொடர்ந்து, கட்சிகள் அனைத்தும் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு ஆகியவற்றை நடத்தி முடித்து, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இதனையடுத்து, கடந்த பிப்ரவரி 26-ந்தேதி முதல் மின்னணு பறிமுதல் மேலாண்மை திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, இதுவரை மொத்தம் ரூ.651 கோடி அளவுக்கு சட்டவிரோத பணம், மதுபானம், போதை பொருட்கள் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இதில் மேற்கு வங்காளத்தில் ரூ.319 கோடி கைப்பற்றப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ரூ.170 கோடி, அசாமில் ரூ.97 கோடி, கேரளாவில் ரூ.58 கோடி மற்றும் புதுச்சேரியில் ரூ.7 கோடி அளவுக்கு பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
அவற்றில் ரூ.53.2 கோடி மதிப்பிலான பணம், ரூ.79.3 கோடி மதிப்பிலான மதுபானம், ரூ.230 கோடி மதிப்பிலான போதை பொருட்கள், ரூ.58 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி போன்ற நகைகள் மற்றும் ரூ.231 கோடி மதிப்பிலான பிற இலவச பொருட்களும் அடங்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.