ராஜஸ்தானில் 55 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்ட 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு

55 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்ட 5 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தானில் 55 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்ட 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு
Published on

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் தவுசா பகுதியில் அமைந்துள்ள கலிகாட் கிராமத்தில் கடந்த 9-ந்தேதி பிற்பகல் 3 மணியளவில் வயலில் விளையாடிக் கொண்டிருந்த ஆர்யன் என்ற 5 வயது சிறுவன் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதையறிந்த கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தேசிய மீட்பு படையினர் சிறுவனை மீட்கும் பணியில் 2 நாட்களாக விடிய, விடிய ஈடுபட்டனர்.

முன்னதாக 150 அடி ஆழத்தில் கிடந்த சிறுவன் சுவாசிக்க வசதியாக ஆக்சிஜனை குழாய் மூலம் அனுப்பி வைத்தனர். பின்னர் சிறுவனின் ஒவ்வொரு அசைவு மற்றும் நடவடிக்கைகளை கண்காணிக்க கேமராக்களை குழிக்குள் இறக்கி பொருத்தினர்.

இந்த நிலையில் கிணற்றில் துளையிடும் எந்திரங்களைப் பயன்படுத்தி குழிகள் தோண்டப்பட்டு வீரர்கள் உள்ளே இறங்கி 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்து கிடந்த சிறுவனை 55 மணி நேர போராட்டத்துக்கு பின்னர், நேற்று இரவு 10 மணியளவில் உயிருடன் மீட்டு மேலே கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட சிறுவன் மயக்கமடைந்த நிலையில் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், "ஆழ்துளையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவனுக்கு அனைந்து உயிர்க்காக்கும் வசதிகளும் செய்யப்பட்டது. இருப்பினும், சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்" என்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com