கர்நாடகத்தில் பணியின்போது உயிரிழக்கும் வன ஊழியர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு

கர்நாடகத்தில் பணியின்போது உயிரிழக்கும் வன ஊழியர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளது.
கர்நாடகத்தில் பணியின்போது உயிரிழக்கும் வன ஊழியர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு
Published on

பெங்களூரு:

ரூ.50 லட்சம் நிவாரணம்

கர்நாடக அரசின் வனத்துறை சார்பில் தேசிய வன ஊழியர்கள் தியாக தின விழா பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள வன பவனில் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கெண்டு பேசியதாவது:-

கர்நாடகத்தில் வன ஊழியர்கள் பணியின்போது உயிரிழந்தால் ரூ.20 லட்சம் வழங்கப்பட்டு வந்தது. எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது அது ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டது. இப்போது நான், பணியின்போது உயிரிழக்கும் வன ஊழியர்களின் குடும்பத்திற்கு நிவாரண தொகையை ரூ.50 லட்சமாக உயர்த்துகிறேன். நீங்கள் காடுகளை பாதுகாத்தால் உங்களை பாதுகாக்கும் வேலையை அரசு செய்கிறது.

ரூ.100 கோடியில் திட்டம்

வனத்துறையில் உள்ள காலியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளோம். நீங்கள் தொடர்ந்து வனத்தை காக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும். காப்பு காடுகளை அதிகரிக்க சிறப்பு திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளோம். அதன்படி இயற்கை வளங்களை பாதுகாக்கும் பணிக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. கர்நாடகத்தில் தற்போது மொத்த நிலபரப்பில் 21 சதவீதம் காடுகள் உள்ளன. இதை 30 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

யானைகள் ஊருக்குள் வந்து பெரும் இடையூறு ஏற்படுத்துகின்றன. மக்களின் உயிர்கள் பறிபோகின்றன. விவசாய பயிர்கள் நாசமாகின்றன. இதை தடுக்க ரூ.100 கோடியில் ஒரு திட்டத்தை வகுத்துள்ளோம். இந்த நேரத்தில் மரணம் அடைந்த வனத்துறை மந்திரி உமேஷ்கட்டியின் பணிளை நினைவு கொள்கிறேன். அவர், வன விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க இரும்பு கம்பி வேலி அமைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.

காடுகளின் பரப்பு

அர்ப்பணிப்பு உணாவுடன் பணியாற்றினால் காடுகளின் பரப்பை அதிகரிக்க முடியும். மேற்கு தொடர்ச்சி மலை இல்லாவிட்டால் நமது மாநிலத்தின் நிலை என்ன என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இந்த மலையால் தான் நமக்கு மாநிலம் முழுவதும் நல்ல மழை பெய்கிறது. இன்று நிலைமை மாறியுள்ளது. ஆண்டுதோறும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. மழை காலம் அதிகரித்துவிட்டது.

சுற்றுச்சூழலில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தின் நலன் கருதி இதை நாம் சரிசெய்ய வேண்டியது அவசியம். வருங்கால தலைமுறைக்கு நாம் நல்ல சுற்றுச்சூழலை கொடுக்காவிட்டால் நாம் அவர்களை மோசம் செய்வதற்கு சமம். அவர்களின் உரிமையை நாம் பறித்து கொண்டது போல் ஆகிவிடும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com