

புதுடெல்லி,
கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் கடுமையான ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. இந்த ஊரடங்கு உத்தரவால் அத்தியாவசிய பணிகள் தவிர அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் உலக நாடுகளின் பொருளாதாரம் அடியோடு முடங்கிப்போய் உள்ளது. அனைத்து முன்னணி நிறுவனங்களின் பங்குகளும் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. மியூச்சுவல் பண்ட் திட்டங்களிலும் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே அமெரிக்காவின் பிராங்க்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் பண்டு நிறுவனம் அதன் 6 கடன் அளித்த திட்டங்களை மூடிவிட்டது. இதனால், அதன் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் ஏற்பட்ட சூழ்நிலையை ஆராய்ந்த மத்திய ரிசர்வ் வங்கி, இந்தியாவில் மியூச்சுவல் பண்டு நிறுவனங்களுக்கு 50 ஆயிரம் கோடி கடனுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது.
மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க இந்த கடனுதவி அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. நிலையான ரெப்போ விகிதத்தில் 90 நாட்கள் ரெப்போ நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.
இந்திய வங்கி அமைப்பில் பண நெருக்கடி ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. சந்தையில் பணப்புழக்கத்தை மேம்படுத்துவது, பண பரிமாற்றத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது, வாங்கிய கடனை திரும்பச் செலுத்தும்போது ஏற்படும் அழுத்தங்கள் மற்றும் இடர்பாடுகளை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டுள்ளது.
சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கையாக, நீண்ட கால ரெப்போ வட்டி நடவடிக்கைகளை இலக்காக கொண்டு மூலதனத்தை குவிக்கும் அறிவிப்புகளையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.