ஒடிசா: பூரி ஜெகநாதர் கோவில் தேரோட்டத்தில் நெரிசல் - பலர் காயம் என தகவல்


ஒடிசா: பூரி ஜெகநாதர் கோவில் தேரோட்டத்தில் நெரிசல் - பலர் காயம் என தகவல்
x
தினத்தந்தி 27 Jun 2025 10:51 PM IST (Updated: 27 Jun 2025 10:52 PM IST)
t-max-icont-min-icon

ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோவில் தேரோட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது.

பூரி,

ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை உலகப் புகழ்பெற்றது. ஜெகநாதரின் 12 யாத்திரைகளில் ரத யாத்திரை மிகவும் புனிதமானது மற்றும் மிகவும் பிரபலமானது. மூலவர்களான பாலபத்திரர் (பலராமர்) அவரின் சகோதரர் ஜெகநாதர் (கிருஷ்ணர்), சகோதரி சுபத்ரா ஆகியோர் தனித்தனி தேர்களில் எழுந்தருளி, பூரி நகரத்தை யாத்திரையாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ரத யாத்திரைக்காக மூன்று பிரமாண்ட தேர்களும் புதிதாக வடிவமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டன. இப்பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று அதிகாலையில் ரத யாத்திரைக்கான பூஜைகள் தொடங்கின. ஜெகநாதர் தேரில் வெள்ளை நிறத்தில் 4 குதிரை சிற்பங்கள், பாலபத்திரர் தேரில் கருப்பு நிறத்தில் 4 குதிரைகள், சுபத்ரா எழுந்தருளும் தேரில் சிவப்பு நிறத்தில் 4 குதிரை சிற்பங்கள் இணைக்கப்பட்டன. 4 தேர்களுக்கும் சாரதிகள் அமர வைக்கப்பட்டனர்.

அதன்பின்னர் ரத யாத்திரை தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேர்களை இழுக்கத் தொடங்கினர். முதலில் பாலபத்திரர் தேர், அதன் பின்னர் சுபத்ரா தேவி எழுந்தருளிய தேர் புறப்பட்ட பின்பு, இறுதியாக ஜெகநாதர் எழுந்தருளிய தேர் புறப்பட்டது. வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களும் பூரி நகரின் வீதிகளில் அசைந்தாடி செல்லும் காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்றுள்ளனர். 9 நாட்கள் இந்த திருவிழா நடைபெற உள்ளது. ரத யாத்திரையை முன்னிட்டு பூரி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்பு படையினர் 10 ஆயிரம் பேருடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பூரி ரத யாத்திரையில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலானோர் சிறிய காயங்களுக்கு உள்ளாகி உள்ளனர். காயமடைந்தவர்களில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 8 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தேரின் புனித கயிறுகளைப் பிடிக்க பக்தர்கள் முண்டியடித்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story