

புதுடெல்லி
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 206 ஆக உயர்ந்து உள்ளது. 4 இந்தியர்கள் மற்றும் ராஜஸ்தானில் சிகிச்சை பெற்று வந்த இத்தாலி நாட்டை சேர்ந்தவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதை தொடர்ந்து கொரோனா பாதிப்பால் இந்தியாவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்படுகிறது. அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டு சோதிக்கப்பட்டு வருகிறது.
ஆயிரக்கணக்கான ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தினமும் ஆய்வகங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இதனால் ஆய்வு முடிவு கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் சென்னை, நெல்லை, தேனி, திருவாரூர் ஆகிய இடங்களில் மட்டுமே கொரோனா பரிசோதனை மையம் உள்ளது. 5-வதாக தற்போது சேலத்தில் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் சார்பில் 72 ஆய்வகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு கொரோனா வைரஸ் சோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இந்த மாத இறுதிக்குள் விஞ்ஞான ஆராய்ச்சி கழகம் பயோ-டெக்னாலஜி துறை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி, வளர்ச்சி கழகம் மேலும் 49 ஆய்வகங்கள் செயல்படும்.
அதே போல், சுமார் 51 தனியார் ஆய்வகங்களுக்கு பரிசோதனை செய்ய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி வழங்கியுள்ளது, இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும். எனினும், இதற்காக தனியார் மையங்கள் ரூ.5 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கலாம் என்றும் தெரிகிறது.
அரசு ஆய்வகங்களில் நடத்தப்படும் அதே முறையிலான பரிசோதனையே இங்கும் நடத்தப்பட உள்ளது. எனினும், சில நாட்களுக்கு தனியார் மையங்களை இலவசமாக பரிசோதனை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
ரூ.5000 செலவாகும் இந்த சோதனைகளை, அரசு இலவசமாக செய்து வருகிறது. ஆனால், மிகவும் சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு மட்டுமே செய்யப்படுகிறது. தனியார் ஆய்வகங்ள் இந்த பரிசோதனையை செய்யும்போது, அவை பரவலாக பல மக்களையும் சென்று சேரும். இது நோய் பரவலை உடனே கண்டறிந்து சிகிச்சையளிக்க உதவும் என்று கூறப்படுகிறது.