உ.பி.யில் புதிய எம்.எல்.ஏ.க்களில் 51 சதவீதத்தினர் குற்ற பின்னணி கொண்டவர்கள்..!!

உ.பி.யில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் பாதிக்கும் மேற்பட்டோர் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் என தெரிய வந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

லக்னோ,

உ.பி.யில் 7 கட்டங்களாக நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 10-ந் தேதி எண்ணப்பட்டன. இதில் வெற்றி பெற்ற 403 புதிய எம்.எல்.ஏ.க்களின் பின்னணி விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி அதிர வைக்கின்றன.

உ.பி. தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் புதிய எம்.எல்.ஏ.க்கள் பின்னணி பற்றி ஆய்வு செய்து வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-

* புதிய எம்.எல்.ஏ.க்களில் 91 சதவீதத்தினர் (எண்ணிக்கையில் 366 பேர்) கோடீஸ்வரர்கள் ஆவார்கள். (கடந்த 2017-ல் இந்த எண்ணிக்கை 322 ஆகும்.) புதிய எம்.எல்.ஏ.க்களில் பா.ஜ.க.வில் 233 பேர், சமாஜ்வாடியில் 100 பேர், அப்னாதளத்தில் 9 பேர், ராஷ்டிரிய லோக்தளத்தில் 7 பேர் கோடீஸ்வரர்கள் ஆவார்கள்.

* புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உ.பி. சட்டசபை உறுப்பினர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.8.06 கோடி ஆகும்.

* பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சராசரி சொத்து மதிப்பு ரூ.8.14 கோடி, சமாஜ்வாடி எம்.எல்.ஏ.க்கள் சராசரி சொத்து மதிப்பு ரூ.7.39 கோடி, அப்னாதளம் எம்.எல்.ஏ.க்கள் சராசரி சொத்து மதிப்பு ரூ.7.13 கோடி ஆகும்.

* புதிய எம்.எல்.ஏ.க்கள் 403 பேரில் 51 சதவீதத்தினர், அதாவது 205 பேர் கிரிமினல் என்னும் குற்ற பின்னணி கொண்டவர்கள். கடந்த 2017-ல் இந்த எண்ணிக்கை 143 ஆக (36 சதவீதம்) இருந்தது. ஆக, இந்த முறை கிரிமினல் பின்னணி கொண்டவர்களுக்கு மக்கள் அதிகளவில் வாய்ப்பு தந்திருப்பது நிரூபணமாகி உள்ளது. அதிலும் குறிப்பாக 39 சதவீத எம்.எல்.ஏ.க்கள் அதாவது, 158 பேர் தங்கள் மீது கொலை, கொலை முயற்சி, கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். 2017-ல் இந்த எண்ணிக்கை 26 சதவீதமாக (107 பேர்) இருந்தது.

* பா.ஜ.க.வில் 111 எம்.எல்.ஏ.க்கள், சமாஜ்வாடியில் 71 எம்.எல்.ஏ.க்கள், ராஷ்டிரிய லோக்தளத்தில் 7 எம்.எல்.ஏ.க்கள் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்று அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com