

புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-
கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்து இதுவரை முன்னெச்சரிக்கையாக 5 ஆயிரத்து 161 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கல் வீசுபவர்கள், பிரிவினைவாதிகள், கிளர்ச்சியாளர்கள், கட்சி தொண்டர்கள், பயங்கரவாதிகளுக்கு உதவுபவர்கள் ஆகியோரும் அடங்குவர். இவர்களில் 609 பேர் இன்னும் காவலில் உள்ளனர். முன்னாள் முதல்-மந்திரிகள் 3 பேரும் இவர்களில் அடங்குவர். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்து போலீஸ் துப்பாக்கி சூட்டில் யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால், பயங்கரவாத சம்பவங்களில், 3 போலீசாரும், 17 அப்பாவிகளும் பலியாகி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.