

பெங்களூரு,
போலி எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்த 52 சுகாதார ஊழியர்களை ஒரே நாளில் பணியிடை நீக்கம் செய்து சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
கல்யாண-கர்நாடக பகுதியில் சுகாதாரத்துறையில் குரூப் டி ஊழியர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்காக, எஸ்.எஸ்.எல்.சி. அல்லது அதற்கு இணையான தகுதியை குறிப்பிட்டு, 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் கர்நாடக அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த பணிக்கான இறுதிப் பட்டியல் அதே ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டு, 2016 ஜூன் மாதம் நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மொத்தம் 52 பணியாளர்கள் கல்யாண கர்நாடக பகுதியில் உள்ள பல்வேறு மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்றி வந்தனர்.
இந்த நிலையில், பணியில் சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழ்கள் போலியானவை என குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளரிடம் கடந்த 2023-ம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் சுகாதாரத் துறை சார்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் போலி மதிப்பெண் தாள்கள் மூலம் தங்கள் மதிப்பெண்களை 560-ல் இருந்து 586 ஆகவும், பின்னர் 625 ஆகவும் உயர்த்தியுள்ளனர். மேலும், அன்று தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் உறுதிப்படுத்தல் கடிதங்களும் போலியானவை என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து விளக்கம் கேட்டு அவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 22-ந்தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் யாரும் உரிய விளக்கம் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து பணியில் அலட்சியம், போலி ஆவணங்கள் மூலம் பணியில் சேர்ந்த குற்றச்சாட்டின் பேரில் கல்யாண-கர்நாடக சுகாதாரத்துறையில் குரூப் டி ஊழியர்களாக நியமிக்கப்பட்ட 52 பேரையும் ஒரே நாளில் பணியிடை நீக்கம் செய்து கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், இந்த ஊழியர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்குக் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. ஒரே நேரத்தில் 52 டி குரூப் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.