

புதுடெல்லி,
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் சர்வதேச ராணுவ கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு வரை இந்த கண்காட்சி பெரும்பாலும் டெல்லியிலேயே நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு முதல் முறையாக கோவாவில் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த ஆண்டு சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் கண்காட்சி நடக்கிறது.
வருகிற 11ந்தேதி (புதன் கிழமை) முதல் 14ந்தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் முதல் முறையாக இந்திய நிறுவனங்கள் அதிக அளவில் பங்கேற்க இருப்பதாக ராணுவ உற்பத்தி செயலாளர் அஜய்குமார் தெரிவித்தார். இது தொடர்பாக டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இதுவரை நடத்தப்பட்ட ராணுவ கண்காட்சிகளில் வெளிநாட்டு நிறுவனங்களே தங்கள் தயாரிப்புகளை அதிக அளவில் காட்சிக்கு வைத்துள்ளன. ஆனால் ஒரு சர்வதேச ராணுவ தளவாட தயாரிப்பு மையமாக இந்தியா முன்னேறி வரும் நிலையில், இந்த ஆண்டு கண்காட்சியில், இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய நிறுவனங்களே பெரும்பாலும் பங்கேற்கின்றன.
மொத்தத்தில் 523 இந்திய நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளன. மேலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 70 பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. பொதுத்துறை மற்றும் தனியார்துறை தயாரிப்புகள் அரங்கில் இடம்பெறும். ஒரே இந்தியா அரங்கமாக இந்த கண்காட்சி காட்சியளிக்கும். முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் இது ஒரு மிகப்பெரிய மாற்றம் ஆகும்.
இந்திய நிறுவனங்கள் மட்டுமின்றி 154 சர்வதேச காட்சியாளர்களும் இந்த கண்காட்சியில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர். கடந்த ஆண்டுகளைவிட 10 சதவீதம் அளவுக்கு சர்வதேச நிறுவனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு இருக்கிறது.
மத்திய அரசின் ஸ்டார்ட் அப் திட்டங்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் பாதுகாப்பு சிறப்புக்கான கண்டுபிடிப்புகள் என்ற புதிய திட்டத்தை ராணுவ அமைச்சகம் அந்த கண்காட்சியில் தொடங்க உள்ளது.
இந்த கண்காட்சி வர்த்தக பார்வையாளர்களுக்காக 11ந்தேதி திறக்கப்படும். பின்னர் 12ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி, முறைப்படி இந்த கண்காட்சியை தொடங்கி வைப்பார்.
இவ்வாறு ராணுவ உற்பத்தி செயலாளர் அஜய் குமார் தெரிவித்தார்.
இந்த கண்காட்சியில் பங்கேற்குமாறு சீனாவுக்கு முதல் முறையாக அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் அந்த நாடு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் ராணுவ உற்பத்தி கூடுதல் செயலாளர் சுபாஷ் சந்திரா கூறினார்.