

கொல்கத்தா
மேற்கு வங்காளத்தில் மே 7-ந்தேதியுடன் அரசின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு, மேற்கு வங்காள சட்டசபைக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை முன்னிட்டு, கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, பிரசாரம் உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்த நிலையில், மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் இன்று பேசும்போது, பாகிஸ்தானின் பாதுகாப்பு மந்திரி கவாஜா ஆசிப், தூண்டி விடும் வகையிலான அறிக்கையை வெளியிட்டு இருக்க கூடாது என்றார். 55 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் விளைவுகளை சந்தித்தனர்.
பாகிஸ்தான் 2 ஆக உடைந்தது என 1971-ம் ஆண்டு நடந்த போரை குறிப்பிட்டு அவர் பேசினார். அதன் விளைவாக வங்காளதேசம் உருவானது. அவர்கள் வங்காளத்தின் மீது ஒரு கண் வைத்தால், இந்த முறை பாகிஸ்தான் எத்தனை பகுதிகளாக உடையும் என்று கடவுளுக்கு மட்டுமே தெரியும் என்றார்.
பாகிஸ்தானின் பாதுகாப்பு மந்திரி கவாஜா ஆசிப் நேற்று கூறும்போது, இந்தியா இந்த முறை ஏதேனும் தவறான தாக்குதலை நடத்தினால், கடவுளின் ஆசியுடன், கொல்கத்தாவை நாங்கள் தாக்குவோம் என்று அவர் கூறியது சர்ச்சையானது.