

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பின் அளவு அதிகரித்து வருகிற வேளையில், குணம் அடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இது மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அந்த வகையில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் இந்தியாவில் 56 ஆயிரத்து 383 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோர் எண்ணிக்கை 16 லட்சத்து 95 ஆயிரத்து 982 ஆக அதிகரித்து உள்ளது. மீட்புவிகிதம் என்பது 70.77 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இந்தியாவில் தற்போது பல்வேறு ஆஸ்பத்திரிகளில் கொரோனா பாதிப்பில் இருந்து மீள்வதற்காக 6 லட்சத்து 53 ஆயிரத்து 622 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை விட கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை (10 லட்சத்து 42 ஆயிரத்து 360) அதிகம் ஆகும்.
இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.