மாலத்தீவுகளில் சிக்கித் தவித்த 588 இந்தியர்கள்; கப்பல் மூலமாக அழைத்து வரப்பட்டனர்

மாலத்தீவுகளில் இருந்து 588 இந்தியர்கள் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். ஜலஷ்வா கப்பல் மூலம் கொச்சி துறைமுகம் இன்று வந்து சேர்ந்தனர்.
மாலத்தீவுகளில் சிக்கித் தவித்த 588 இந்தியர்கள்; கப்பல் மூலமாக அழைத்து வரப்பட்டனர்
Published on

புதுடெல்லி,

உலகெங்கும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவி வந்ததையடுத்து, ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கியவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. அந்த வகையில் பல்வேறு நாடுகளில் சிக்கித்தவித்த இந்தியர்கள் பலர் தங்களை சொந்த ஊர் திரும்ப உதவி செய்யுமாறு இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதனை தொடர்ந்து சீனா, மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து விமானம் மூலமாக இந்தியர்களை அழைத்து வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில் மாலத்தீவுகளில் சிக்கித் தவித்த இந்தியர்கள் பலர் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து அவர்களை ஐ.என்.எஸ். ஜலஷ்வா கப்பல் மூலம் இந்தியா அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்தது. இந்த கப்பல் கடந்த 15ஆம் தேதி 588 இந்தியர்களுடன் மாலத்தீவுகளின் தலைநகர் மாலேயில் இருந்து புறப்பட திட்டமிடப்பட்டது. ஆனால், மோசமான வானிலை, புயல் காரணமாக கப்பல் 16ஆம் தேதிதான் புறப்பட்டது. இந்த கப்பல் இன்று கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. பயணிகளில், 6 கர்ப்பிணிகள் உள்பட 70 பெண்கள் இருந்தனர்.

இவர்களை மாநில கடற்படை, மாவட்ட நிர்வாகத்தினர், துறைமுக அதிகாரிகள் வரவேற்றனர். இவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டறிய சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. பரிசோதனைக்கு பின்னர் இவர்கள் அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com