

புதுடெல்லி,
5 மாநில தேர்தலில் தோல்வியை சந்தித்த பிறகு முதல் முறையாக காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் கூட்டம் வருகிற 5-ந் தேதி டெல்லியில் நடக்கிறது. தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடக்கிற இந்த கூட்டத்தில் கட்சியின் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் கலந்துகொள்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் நடப்பு அரசியல், முக்கிய பிரச்சினைகள், இரு அவைகளிலும் செயல்படும் விதம் உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்படுகிறது. பெட்ரோல்-டீசல், எரிவாயு விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தியும், மத்திய அரசு செவி கொடுக்காத நிலையில், நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சினையை தீவிரமாக கையில் எடுப்பது பற்றியும் விவாதிக்கப்படலாம் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.