இந்தியாவை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டுசெல்ல 5ஜி வழிவகுக்கும்: பிரதமர் மோடி பேச்சு

இந்தியாவில் 5ஜி இணைய சேவையை தொடங்கி வைத்துள்ள பிரதமர் மோடி, 5ஜி மூலம் உலக அளவில் இந்தியா சிறப்பான முன்னேற்றத்தை அடையும் என்று பேசினார்.
இந்தியாவை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டுசெல்ல 5ஜி வழிவகுக்கும்: பிரதமர் மோடி பேச்சு
Published on

புதுடெல்லி,

இந்திய மொபைல் காங்கிரசின் 4 நாள் மாநாடு, புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இன்று நடைபெற்றது. 'இந்தியா மொபைல் காங்கிரஸ்-2022' மாநாட்டின் தொடக்க விழாவில், இன்று பிரதமர் நரேந்திர மோடி 5ஜி இணையத்தை முறைப்படி காலை 10 மணிக்கு தொடங்கி வைத்தார்.

நாட்டின் மூன்று பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் முன் 5ஜி இணையத்தின் மாதிரியை காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

5ஜி அடிப்படையிலான டிரோன்கள், கழிவுநீர் கண்காணிப்பு அமைப்புகள், சுகாதாரம் தொடர்பான தொழில்நுட்பம் மற்றும் இணைய பாதுகாப்பிற்கான செயற்கை நுண்ணறிவு சார்ந்த தளங்கள் மூலம் விவசாயத்தின் தொழில்நுட்பத்தையும் அவர் மேற்பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது:- டிஜிட்டல் இந்தியா என்பது நாட்டின் வளர்ச்சிக்கான திட்டம். இந்தியாவை அடுத்த வளர்ச்சிக்கு கொண்டுசெல்ல 5ஜி வழிவகுக்கும். 5ஜி சேவை மூலம் உலக அளவில் இந்தியா சிறப்பான முன்னேற்றத்தை அடையும்.

மேலும் இந்த 5ஜி சேவையானது கிராம மக்கள் முதல் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும். ஏழை எளிய மக்கள் முதல் இந்த 5ஜி தொழில்நுட்பத்தை கொண்டுசெல்லவேண்டியது நமது பொறுப்பு ஆகும். 5ஜி மூலம் பல புதிய வாய்ப்புகள் இந்திய இளைஞர்களுக்கு கிடைக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

முதலில், குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவை அமலுக்கு வருகிறது. 2 ஆண்டுகளுக்குள் படிப்படியாக நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று தெரிகிறது. 4ஜி சேவையை விட பல மடங்கு வேகத்தில் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய 5ஜி சேவை உதவும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com