கோவின் இணையதளத்தில் ஒரே தொலைபேசி எண்ணில் 6 பேர் முன்பதிவு செய்யலாம் - மத்திய அரசு தகவல்

கோவின் இணையதளத்தில் இனி 6 பேர் ஒரே தொலைபேசி எண்ணில் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவின் இணையதளத்தில் ஒரே தொலைபேசி எண்ணில் 6 பேர் முன்பதிவு செய்யலாம் - மத்திய அரசு தகவல்
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணி மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் சார்பில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மேலும் கோவின் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வழங்கப்படுகிறது.

தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நபர்களின் பெயர், தொலைபேசி எண் ஆகியவை கோவின் இணையதளத்தில் பதிவு செய்யப்படும். தடுப்பூசி செலுத்திய பிறகு அதற்கான சான்றிதழ் சம்பந்தப்பட்ட நபருக்கு தொலைபேசி எண் மூலமாக குறுந்தகவல் மூலம் அனுப்பி வைக்கப்படும். அதை வைத்து சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

இதில் ஒரே தொலைபேசி எண்ணை பயன்படுத்தி 4 நபர்கள் முன்பதிவு செய்யும் வகையில் கோவின் இணையதளம் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இனி கோவின் இணையதளத்தில் 6 பேர் ஒரே தொலைபேசி எண்ணில் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் சில இடங்களில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தியதாக சான்றிதழ் வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை சரிசெய்யும் வகையில், கோவின் இணையதளத்தில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் பயனாளர்கள் தங்களது தடுப்பூசி டோஸ் விவரங்களை மாற்றியமைக்க முடியும் எனவும், 3 முதல் 7 நாட்களுக்குள் அவர்களது விவரங்கள் சரிசெய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தகக்து.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com