தொழில் அதிபர் கொலை வழக்கில் 3 பெண்கள் உள்பட 6 பேர் கைது

ஹாசனில் தொழில் அதிபர் கொலை வழக்கில் 3 பெண்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
தொழில் அதிபர் கொலை வழக்கில் 3 பெண்கள் உள்பட 6 பேர் கைது
Published on

ஹாசன்:-

தொழில் அதிபர்

ஹாசன்(மாவட்டம்) டவுன் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணகவுடா. இவர் கிரானைட் தொழில் அதிபர் ஆவார். மேலும் இவர் முன்னாள் மந்திரியும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான எச்.டி.ரேவண்ணாவின் தீவிர ஆதரவாளர் ஆவார். கடந்த 9-ந் தேதி அன்று இவரை மர்ம நபர்கள் கொலை செய்திருந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதாவது கொலையான கிருஷ்ணகவுடாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த யோகானந்த் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது சினிமா தயாரிக்கவும், உள்ளூர் கேபிள் டி.வி. தொடங்கவும் என பல கோடி ரூபாய் பணத்தை கிருஷ்ணகவுடாவிடம் இருந்து யோகானந்த் வாங்கி உள்ளார்.

மோசடி

பின்னர் அவர் பணத்தை உடனடியாக திரும்ப தர இயலவில்லை என்றும், அதனால் தான் தொடங்கிய தொழில்களில் பங்குதாரராக இணைத்துக் கொள்வதாகவும் கிருஷ்ணகவுடாவிடம் கூறி இருக்கிறார். அதை கிருஷ்ணகவுடாவும் நம்பி இருக்கிறார். ஆனால் யோகானந்த் லாபத்தில் பங்கு தராமலும், பங்குதாரராக இணைத்துக் கொள்ளாமலும், தான் வாங்கிய பணத்தை திருப்பி தராமலும் மோசடி செய்தார். இதுபற்றி அறிந்த கிருஷ்ணகவுடா தான் கொடுத்த பணத்தை திருப்பி தந்துவிடுமாறு கேட்டிருக்கிறார்.

இதனால் கடந்த 9-ந் தேதி யோகானந்த், தனது நண்பர்கள் சுரேஷ், கிருஷ்ணகுமார், சஞ்சய், தோழிகள் சுதாராணி, அஸ்வினி, சைத்ரா ஆகியோரை வரவழைத்து, அவர்கள் வாயிலாக திட்டம் தீட்டி கிருஷ்ணகவுடாவை கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

6 பேர் கைது

மேலும் அவர்கள் கடந்த 6 மாதங்களாக திட்டமிட்டு இந்த கொலையை அரங்கேற்றியதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சுரேஷ், கிருஷ்ணகுமார், சஞ்சய், சுதாராணி, அஸ்வினி, சைத்ரா ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள யோகானந்தை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com