பம்பர் பரிசு விழும் என 60 ஆண்டு காத்திருப்பு! நகைகளை விற்று ரூ.2 கோடிக்கு லாட்டரி வாங்கிய முதியவர்

ராகவன் கடந்த 1967-ம் ஆண்டு முதல், அதிர்ஷ்டத்தை நம்பி லாட்டரி சீட்டுகளை வாங்க தொடங்கியுள்ளார்.
பம்பர் பரிசு விழும் என 60 ஆண்டு காத்திருப்பு! நகைகளை விற்று ரூ.2 கோடிக்கு லாட்டரி வாங்கிய முதியவர்
ராகவன்
Published on: 

திருவனந்தபுரம்,

கேரளாவில் பம்பர் பரிசு அடிக்கும் என்ற நம்பிக்கையில், கடந்த 60 ஆண்டுகளில் விவசாய நிலம், மனைவி நகைகளை விற்று சுமார் ரூ.2 கோடிக்கு லாட்டரி சீட்டுகளை வாங்கி முதியவர் ஒருவர் குவித்துள்ளார். தற்போதைய நிலையில் அவரிடம் 5 மூட்டைகள் நிறைய பழைய லாட்டரி சீட்டுகள் மட்டுமே மிஞ்சியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

60 ஆண்டு லாட்டரி வாங்கும் பழக்கம்

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கரிவெல்லூர் அருகே உள்ள பாலக்குண்னு பகுதியை சேர்ந்தவர் பி.பி. ராகவன் (வயது 80). விவசாயியான இவர், கடந்த 1967-ம் ஆண்டு முதல் அதிர்ஷ்டத்தை நம்பி லாட்டரி சீட்டுகளை வாங்க ஆரம்பித்துள்ளார். என்றாவது ஒரு நாள் தமக்கு பம்பர் பரிசு அடிக்கும், அதன் மூலம் தனது வாழ்க்கை ஒட்டுமொத்தமாக மாறிவிடும் என்று அவர் தீவிரமாக நம்பினார்.

இதன் காரணமாக, நாளுக்கு நாள் லாட்டரி வாங்கும் பழக்கம் அவருக்கு போதையாக மாறியது. தற்போது 60 ஆண்டுகளை நெருங்கிய நிலையிலும், ராகவனால் இந்த பழக்கத்தை கைவிட முடியவில்லை.

நிலம், நகைகள் இழப்பு

லாட்டரி சீட்டுகள் வாங்குவதற்காக, தமக்கு சொந்தமான விவசாய நிலம் மற்றும் மனைவியின் தங்க நகைகள் உள்ளிட்ட பல சொத்துக்களை ராகவன் அடுத்தடுத்து விற்றுள்ளார். இதுவரை அவர் சுமார் ரூ.2 கோடி வரை லாட்டரி சீட்டுகளுக்காக மட்டுமே செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆயிரக்கணக்கில் மட்டுமே பரிசு

இவ்வளவு பணம் செலவழித்தும், இவருக்கு சில முறை மட்டுமே பரிசு விழுந்துள்ளது. அதுவும் வெறும் ஆயிரக்கணக்கில் மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் ராகவனுக்கு சொத்துக்கள் பறிபோனதுடன், கடன் தொல்லையும் அதிகரித்துள்ளது.

5 மூட்டை சீட்டுகள்

ஆனாலும் மனம் தளராத ராகவன், இன்று வரை லாட்டரி சீட்டு வாங்குவதை நிறுத்தவில்லை. கடன் சுமை ஒருபுறம் இருந்தாலும், தினமும் லாட்டரி வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும், தான் இதுவரை காசு கொடுத்து வாங்கிய அதிர்ஷ்டம் தராத பழைய லாட்டரி சீட்டுகள் அனைத்தையும் வீசி எறியாமல், வீட்டில் பத்திரமாக சேகரித்து வைத்துள்ளார்.

அதிர்ஷ்டம்

தற்போது அவரது வீட்டில் 5 பெரிய மூட்டைகள் நிறைய பழைய லாட்டரி சீட்டுகள் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. வாழ்க்கையை மாற்றப்போகும் அதிர்ஷ்டம், ஒரு மனிதனின் வாழ்வாதாரத்தையே மூட்டையாக கட்டி முடக்கியுள்ள இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com