

பெங்களூரு,
நாடு முழுவதும் மருத்துவமனைகள் மற்றும் இரத்த வங்கிகளில் இரத்தத்திற்கான தேவையானது தொடர்ச்சியாக இருந்து வரும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பெருமளவில் இரத்தம் வீணாகிறது என்பதும் வேதனைக்குரியது. ஒவ்வொரு ஆண்டும் தேவைக்கும் மாறாக அதிகமான இரத்தம் வீணாகிறது. கர்நாடக மாநில அரசின் தகவலின்படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 60 ஆயிரம் யூனிட் இரத்தம் வீணாகிறது என தெரியவந்து உள்ளது. அரசு மற்றும் தனியார் இரத்த வங்கிகளில் இரத்தம் வீணாகிறது. சில மையங்களில் இரத்தம் அடைக்கப்பட்டு இருக்கும் பேக்குகளில் பழுது காரணமாக வீணாகிறது. பேதுமான தரமின்மை மற்றும் காலாவதியானவை எனவும் இரத்தம் நிராகரிக்கப்பட்டு உள்ளது.
மாநிலத்தில் இரத்த வங்கிகள் இடையே காணப்படும் போக்கு குறித்து சட்டசபையில் கவலையை எழுப்பிய பா.ஜனதா உறுப்பினர், இவ்விவகாரத்தில் மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்து பேசிய கர்நாடக மாநில சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் கே.ஆர். ரமேஷ் குமார், இரத்தம் வழங்குபவர்களிடம் இருந்து சேகரிக்கப்படும் கணிசமான அளவு இரத்தம் காலாவதியாகிறது மற்றும் வீணாகிறது, இது அரசின் கவனத்திற்கு வந்து உள்ளது என்றார்.
புள்ளி விபரத்தின்படி 2016-2017-ம் ஆண்டில் மட்டும் 64,913 யூனிட்ஸ் இரத்தம் நிராகரிக்கப்பட்டு உள்ளது, இதில் 34,052 யூனிட்ஸ் இரத்தம் காலாவதியானதால் நிராகரிக்கப்பட்டு உள்ளது. இதுவே கடந்த 2015-16-ம் ஆண்டில் 64,361 யூனிட்ஸ் இரத்தம் நிராகரிக்கப்பட்டு உள்ளது, இதில் 32,644 யூனிட்ஸ் இரத்தம் காலாவதியானதால் நிராகரிக்கப்பட்டு உள்ளது. மாநில அரசின் சுகாதாரத் துறை தகவல்களின்படி பெங்களூரு நகரில் மட்டுமே தனியார் மற்றும் அரசு நிர்வாகம் செய்யும் 64 இரத்த வங்கிகள் செயல்படுகின்றன என தெரியவந்து உள்ளது.
அரசு இரத்த வங்கிகளில் குறைந்த அளவே ரத்தம் வீணாகிறது எனவும் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 1,88,537 யூனிட்ஸ் இரத்தம் வீணாகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேசமாக பராமரிக்கும் இரத்த வங்கிகளை அரசு கண்காணித்து வருவதாகவும், இதுபோன்ற இரத்த வங்கிகள் மீது கடும் நடவடிக்கையை எடுக்க மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு உத்தரவிட்டு உள்ளதாகவும் அரசு தெரிவித்து உள்ளது.